சாதாரணன் - சிப்பாய் - தளபதி - மன்னன் - சக்கரவர்த்தி - கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் - நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
Be the first to rate this book.