கம்ப்யூட்டர் கம்பெனியில், அதுவும் உலகப் பிரசித்தியான நிறுவனத்தில் சீனியர் மேனேஜர் உத்தியோகம் பார்ப்பது மாதிரித் தொல்லை பிடித்த சமாச்சாரம் வேறு எதுவும் இல்லை. தலைக்கு மேலே உட்கார்ந்து முதலாளி வர்க்கம் ‘இருபது மில்லியன் டாலர் பிசினஸ் இந்த வருடம் பிடித்துக்கொண்டு வராவிட்டால் வயிற்றுக்குக் கீழே ஆப்பரேஷன் செய்து நீக்கிவிடுவோம்’ என்று உத்தரவு போட்டுக் கத்தரிக்கோலோடு காத்திருப்பார்கள். வாரம் ஏழு நாள் இருபத்து நாலு மணி நேரம் வெள்ளைக்காரத் துரைகளின் கழிப்பறையைக் கழுவி, கால் பிடித்து விட்டு சிஷ்ருஷை செய்தாலும் ஒரு டாலர் அதிகமாக பிசினஸ் பெயராது என்பது அவர்களுக்கும் தெரியும். இருப்பதும் கைநழுவிப் போகாமல் காப்பதற்காக மேற்படி கஸ்டமர் துரை, துரைசாணிகளுக்கு உள்ளாடை துவைத்துப் போடுகிறது தவிர மற்ற சகலமான குற்றேவலும் செய்யத்தான் என்னை சீனியர் மேனேஜராக்கிக் கண்ணாடிக் கூண்டில் அடைத்து பெரிய ஹாலில் ஐநூறு புரோகிராமர்கள், பிராஜக்ட் லீடர், பிராஜக்ட் மேனேஜர் வர்க்கங்களுக்கு நடுவே உட்கார்த்தியிருக்கிறார்கள்.
Be the first to rate this book.