உங்கள் மனத்தின் அதிசய சக்தியைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான கையேடு!
கடந்த 70 ஆண்டுகளில் பத்து இலட்சம் பிரதிகள் விற்றுள்ள நூல்!
கிளாடு எம். பிரிஸ்டல் எண்ணங்களின் இயல்பு மற்றும் ஆழ்மனத்தின் ஆற்றல் குறித்துச் சொந்தமாக ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார். ஒருமித்தக் கவனக்குவிப்புடன்கூடிய சிந்தனை, மனக்காட்சிப்படைப்பு, ஆணித்தரமான நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் ஒருவரால் எந்தவோர் இலக்கை வேண்டுமானாலும் அடைய முடியும் என்பதை அவர் இந்நூலில் காட்டுகிறார். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கானோர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில்வாழ்க்கையையும் ஒரு மிகப் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளனர். அவர்களில், வாழ்க்கையில் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ள அறிவியலறிஞர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற படைப்பாளிகளும் அடங்குவர். இந்நூலில் அவர்களைப் பற்றிய எடுத்துக்காட்டுகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. இதில் முன்மொழியப்பட்டுள்ள தத்துவம், உங்கள் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை நிகழ்த்துவதற்கான ஒரு நல்ல தூண்டுகோலாக அமையும் என்பது உறுதி.
மாயாஜாலங்களை நிகழ்த்துவதற்கான உங்களுடைய முறை இது!
1891 இல் பிறந்த கிளாட் எம். பிரிஸ்டல், பல ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அவர் ஒரு காவல்துறை நிருபராகப் பணியாற்றியதும், ஒரு கிறித்தவத் தேவாலயப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியதும் அதில் அடங்கும். இதன் மூலம், பல விதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவர் முதலாம் உலகப் போரின்போது இராணுவத்தில் சேர்ந்து, இராணுவச் செய்திப் பத்திரிகையில் பணிபுரிந்தார். அப்போது அவர் வறுமையில் பெரிதும் வாடினார். அதனால், தான் ஊர் திரும்பியதும் ஒரு பெரும் பணக்காரனாக ஆவதென்று அவர் உறுதியெடுத்துக் கொண்டார். அது அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவர் ஊர் திரும்பியதும், அவருடைய நண்பர் ஒருவரின் மூலமாக ஒரு முதலீட்டு வங்கியில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. காலப்போக்கில் அவர் அதன் மூலம் பெரும் பணத்தைக் குவித்தார்.
அவர் மனம் தொடர்பான விஷயங்களில் பெரும் ஆர்வம் கொண்டு, உளவியல், மதம், அறிவியல், மெய்யியல், புராதன மந்திர தந்திரங்கள் போன்றவை தொடர்பான எண்ணற்ற நூல்களைப் படித்தார். அவை அனைத்தின் ஊடாக ஒரு ‘பொன்னிழை’ ஓடுவதை அவர் கண்டறிந்தார். நம்பிக்கை தன்னகத்தே அற்புதமான சக்திகளைக் கொண்டிருக்கிறது என்பதுதான் அது. பின்னர் அவர் தன்னுடைய ஐம்பதுகளில் இருந்தபோது, ‘நம்பிக்கையின் மாயாஜாலம்’ என்ற இந்நூலை எழுதினார். அது உடனடியாகப் பெரும் எண்ணிக்கையில் விற்பனையானது.
அவர் ஒரு சிறந்த பேச்சாளரும்கூட. அவர் 1951 இல் காலமானார்.
Be the first to rate this book.