‘மக்களைப் பொறுப்பேற்க வைத்தால் மட்டுமே எந்த முன்னேற்றத்தையும் சமூகத்தில் கொண்டுவர முடியும்’ என்கிறது பங்கேற்புக் கோட்பாடு.
இந்தியா விடுதலை அடைந்தவுடன் அறிமுகமான சமூக மேம்பாட்டு (கம்யூனிட்டி டெவலப்மெண்ட்) திட்டம் முதல், மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவற்றிலெல்லாம் மக்களின் பங்கேற்பு அதிகமாக இல்லை என்றாலும், ஆய்வுகள் காட்டுகின்றன அதிகாரமும் பங்கேற்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று.
மக்களுக்கு அதிகாரம் வழங்கினால் மட்டுமே, அவர்கள் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையில், அரசு புதிய உள்ளாட்சி அமைப்புகளை, ஓர் அரசாங்கமாக உருவாக்கி, மக்களுக்கு அதிகாரம் அளித்தது. அத்துடன், உள்ளாட்சியின் மூலம் சமூகத்தை சனநாயகப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் மக்கள் பங்கேற்புடன் அடிப்படை மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி விளக்குகிறார் நூலாசிரியர் க. பழனித்துரை. பத்தொன்பது கட்டுரைகளைக் கொண்ட இந்த நூலின் மையக்கருத்து: மக்கள் வெறுமனே ஒரு வாக்காளராக, பயனாளராக, மனுதாராக அல்லாமல் தாங்களே பொறுப்புள்ள குடிமக்களாக மாறி, சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்க வைப்பது பற்றியதாகும்.
இதன் மூலம் அம்பேத்கர் சித்திரித்த கிராமங்களிலிருந்து, காந்தி கனவு கண்ட கிராம இராச்சியத்தையும் உருவாக்கலாம் என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. தலைவர்களும், கிராம மேம்பாட்டில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
Be the first to rate this book.