இரண்டு தலைமுறைக்கு முன்புவரை சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சை முறிக்கும் சிகிச்சை வரை வீட்டிலேயும் உள்ளூர் வைத்தியரிடமும் பார்த்துக்கொண்ட சமூகம், நம் தமிழ்ச் சமூகம். விபத்து போன்றவற்றுக்காகத்தான் மருத்துவமனைக்குச் சென்றார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியா? லேசான தலைவலிக்கு மருத்துவமனை வாசலில் தவமிருக்கும் நிலைதான் இப்போது உள்ளது. நமக்கென இருந்த, இருக்கும் மூலிகைச் செடிகளின் அருமையை அறியாமையால் அவற்றை உதாசினப்படுத்திவிட்டோம். அதனால் மாத்திரைகளுக்கும் ஊசிகளுக்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது நம் ஆரோக்கியம்.
இப்போதெல்லாம் ஒரு நோய்க்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால், அது பத்து பக்கவிளைவுகளைச் சத்தமில்லாமல் அழைத்து வருகிறது. நம் முன்னோர்கள் ஒரு மூலிகை மருந்தால் பல நோய்களைக் குணமாக்கினார்கள். அந்த மகா மருந்து, நோயைக் குணமாக்கியதோடு அல்லாமல் அந்த நோய் மீண்டும் வராமல் நம்மைத் தடுத்தாட்கொண்டது! ஆவாரை, புளியாரை, முடக்கத்தான், தூதுவேளை, சிறுபீளை, சிறியாநங்கை... என சின்னச் சின்ன மூலிகைச் செடிகளில் நிறைந்திருக்கும் பெரிதினும் பெரிய மருத்துவ மகத்துவங்களை விளக்கி, பசுமை விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
நம் நாட்டு மூலிகைச் செடிகளிலிருந்து எடுத்த மருந்தின் மூலப்பொருளை, புட்டிகளிலும் கேப்சூல்களிலும் அடைத்து பெயர் மாற்றி விற்றுக்கொண்டிருக்கின்றன சர்வதேச மருந்து நிறுவனங்கள். இந்த நூலைப் படித்தபிறகு இந்த உண்மையை உணரலாம். நம் உடல் நலம் காக்க நம்மைச் சுற்றி ஆயிரம் மருந்துகள் இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளலாம். வந்த நோயை விரட்டவும் நோய் இனி வராமல் தடுக்கவும் வழிகாட்டும் இந்த நூல், உங்கள் ஆரோக்கியத்தின் ஆசான்!
Be the first to rate this book.