"அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே' என்கிறார் ("மாமேகம் சரணம் வ்ரஜ' - பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி முதலிய சிற்றிலக்கிய வகைமைகளையும் செழுமையுறச் செய்தனர்.
ஸ்ரீமந்நாராயணனே முழுமுதற் கடவுள்; அவன் எல்லாப் பொருள்களிலும் ஆன்மாவாய்-ஜீவ சாட்சியாய் இருந்து காத்து வருகின்றான். அவனது பெருமை அளவிடற்கரியவை என்பதையும், எட்டெழுத்து மந்திரத்தின் பெருமையையும், பிரேம பக்தியையும் (நாயக-நாயகி பாவம்), சரணாகதி தத்துவத்தையும் எடுத்துரைக்கிறது திவ்யப் பிரபந்தம்.
"வேண்டாத உணர்வுகளையும், விரும்பத்தகாத குணங்களையும் கொண்டு கட்டியதே உடலென்னும் சுவராகும். இந்தச் சுவர் (உடல்) எப்போது இடிந்து விழும் என்பதை நாம் அறிய மாட்டோம். அரங்கனுக்கு சேவை செய்யாமல் சரீரத்தைப் போற்றி பறவைகள் கடித்துப் பிடிக்கும் படியாக அழிவைத் தேடிக் கொள்ளலாமா?'' என்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
திருஞானசம்பந்தர் போலவே, நம்மாழ்வாரும் பாசுரப்பயனைக் கூறியிருக்கிறார். நம்மாழ்வார், "பக்திக்கு ஒவ்வாத பொருள்களிடத்தே பற்று வைக்காதீர்கள். உங்களுடைய ஆத்மாவை முக்தியாகிய பரமபதத்தை உடைய எம்பெருமானிடம் சமர்ப்பித்து விடுங்கள்; சரீர நிலையாமை குறித்துச் சற்றே சிந்தித்துப் பாருங்கள்'' என்கிறார்.
"நிலையற்றது இம்மனிதப் பிறவி. இப்பிறவியை விடுவித்து, தனக்கே ஆட்படுத்திக் கொண்டு தனது அருளைப் பொழியும் தலைவன் அவன்; பெருமாள் தம் பக்தர்களைப் பிறவித் தளையில் இருந்து விடுவிக்கிறார்'' என்கிறார் திருமங்கையாழ்வார்.
திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் வைணவ சமயத்தின் சாரத்தை எடுத்துரைக்கின்றன. எளிய நடையில் அமைந்த விளக்கவுரையும், தனித்தனித் தொகுதிகளும் சிறப்பு. பூதத்தாழ்வார் வாக்கிற்கிணங்க "ஞானத்தமிழ்' நூலான இதை பக்தியுடன் பயின்றால் பரமபதம் பெறலாம்.
(நன்றி: தினமணி)
Be the first to rate this book.