அலமாரியில், பீரோவில், மேசை இழுப்பறையில் ஏதோ ஒன்றைத் தேடினால் நம் கண்ணில்படுவது பழைய கடிதங்களாக இருக்கும்! தாத்தா பேரனுக்கு... அம்மா மகனுக்கு... மகள் அப்பாவுக்கு... மனைவி கணவனுக்கு... அண்ணன் தங்கைக்கு... என ஆண்டாண்டு காலமாக எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தால், எழுதியவரின் முகம் பல உணர்வுகளோடு கண்முன்னால் விரியும். நேரில் பேசுவதுபோல உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருக்கும். அத்தனையும், அந்த நேரத்தில் அதை எழுதியவரின் மனம் வடித்த நிஜங்கள்! மனிதநேயம், பேராசை, கோபம், நன்றி, நட்பு போன்ற பண்புகளும் குணங்களும் நமக்கு எதையோ உணர்த்த நினைக்கின்றன. நம்மைச் சார்ந்து இருக்கும் செல்போன், ரயில், பணம், மைக் போன்ற பொருட்கள் நம்முடன் உறவு கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றன. அவை, ஏதோ ஒன்றை நமக்குச் சொல்ல நினைக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்..? அந்த உண்மை வடிவத்தை - பரபரப்பான கடித நடையில் நமக்கு அளித்திருக்கிறார், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் படைக்கும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம், மேடைப் பேச்சு நாகரிகம், மனிதஉயிரைக் காத்தல், உறுப்பு தானம், முதியோரைப் பேணுதல், சுற்றுச்சூழல் காத்தல், விருந்தோம்பல் கலாசாரம், சேமிப்பு... இப்படி அன்றாட வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை அதி உன்னதக் கருத்துகளாகப் பதிவுசெய்திருக்கிறார் நூல் ஆசிரியர். பிரச்னைகள், சிந்தனைகள், உணர்வுகள், தகவல்கள் என அனைத்தையும் பிறர் மனதில் பதிவுசெய்ய சிறந்த வடிவம் கடிதம். உங்கள் நலம் விரும்பும் இந்தக் கடித நூலும் உங்களை நல்வழியில் நடத்திச் செல்லும் என்பது உறுதி.
Be the first to rate this book.