தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வந்த காய்ச்சல்களை பதட்டமே இல்லாமல் விரட்டி அடித்த நாம் தற்போது உலகையே உலுக்கும் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் எபாலோ கண்டு நடுநடுங்குகின்றோம். மனிதனின் லாபவெறிக்காக இயற்கையை சிதைத்து தூண்டப்பட்ட கிருமிகளை ஒடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை எப்போதும் உச்சத்திலே வைத்திருக்கும் வழிமுறைகளை பட்டியலிட்டு ஒவ்வாமை, தீராத தலைவலி, பல் மற்றும் ஈறு பிரச்சனைகளிலிருந்து விடுபெறும் ரகசியத்தையும் குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் சிவராமன்.
‘சுத்தம் என்ற நல்ல பழக்கத்தை பயமாக ஆழ்மனதுக்குள் விதைத்து அதை வணிக மயக்கமாக்கி இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் யுத்தி. மரபணு பயிர்களால் என்றுமே மனித இனத்திற்குக் கேடுதான். இதற்கு மாற்று இயற்கை விவசாயம் மட்டுமே’ என்பதை மிகவும் உறுதியாகக் கூறுகிறார் நூல் ஆசிரியர். ‘நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தரிப்பு மையங்களின் பெருக்கம். மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இதுமாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றும் எழுதியிருக்கிறார்.
மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் ஆனந்த விகடன் வாசகர்களுக்கு அறிவூட்டிய ‘நலம் 360’ என்ற தொடரில் விரிவாக வெளிவந்த கட்டுரைகளில் சிலவற்றை மட்டும் தொகுத்து தற்போது நூல் வடிவைப் பெற்றுள்ளது. தமிழர்கள் மறந்த பாரம்பரிய உணவு மற்றும் பழக்க வழக்கங்களை மீட்டெடுப்பதில் இந்த நூல் சிறந்த கருவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Be the first to rate this book.