முதல் உலகப் போர் நடந்த வேளையில், 1917 இல் பிரிட்டிஷாரால் அறிவிக்கப்பட்ட ‘பால்ஃபோர் பிரகடனம்’ செறிவான கலாச்சாரப் பின்னணியும், செழித்த வாழ்வும், அமைதியான தற்சார்பு வேளாண் சமூகமாக ஒருங்கே அமையப் பெற்று வாழ்ந்து வந்த பாலஸ்தீன மக்களின் எதிர்காலத்தில் இடியாக இறங்குமென்று அப்போது யாரும் அறியவில்லை. யூத இன மக்களுக்கான ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஏகாதிபத்திய நாடுகள் எடுத்த முடிவால் விளைந்த பெருந்தீங்கு இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பாலஸ்தீனத்தை 1922ஆம் ஆண்டு முதல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், தான் ஆள்வதற்கான கட்டளைக் காலம் (British Mandate) முடிவுக்கு வந்து அதை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. அவ்வாறு வெளியறிய 1948ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் நாளுக்கு முதல் நாள் யூதர்களின் தலைவர் ‘பென் குரியன்’ இஸ்ரேல் நாடு உதயமானதாக அறிவித்தார். அய்க்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானமும், இஸ்ரேல் நாடு தங்களது பிறப்புரிமை என்ற குடியேற்ற யூத சியோனிச வாதிகளின் பிடிவாதமும் இத்தகைய அவசர அறிவிப்புக்கு ஆதரவான பின்புலமாக
அமைந்தன.
*********
பேரழிவைக் கண்டும், அதனால் பேராபத்துக்களை சந்தித்தும் தப்பிவந்து, வாழ்விழந்த அகதிகளாய் பல்வேறு முகாம்களில் உயிர் வாழ்ந்து வரும் மக்களின் குரல்கள், அதிகார வர்க்கத்தால் எழுதப்பட்ட உண்மைக்குப் புறம்பான ‘வரலாற்று ஆவணங்களின்’ போலித் தன்மையை இந்நூல் தோலுரிக்கிறது. அகத்தூய்மை நிறைந்த வாய்மையால் வெளிப்படும் இக்குரல்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்ற நிகழ்வுகள் இந்நூலில் உயிர்த்துடிப்பான வரலாறாக மிளிர்கின்றன.
ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் பற்றி இந்த நூல் உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். காரணம் இந்த ‘நக்பா’ என்னும் பேரழிவு நிற்காமல் தொடர்கின்ற ஒன்று என அவர்கள் அவதானிக்கிறார்கள். அந்த நிதர்சன உண்மையின் நிரந்தர
சாட்சியாகவே இன்று நம்முன் நிகழ்கின்ற இஸ்ரேல்- பாலஸ்தீன போர் விளங்குகிறது.
Be the first to rate this book.