கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழின் தொகுப்பே இந்த நகுலன் 100 புத்தகம். நூற்றாண்டு கண்ட நவீனத் தமிழிலக்கியத்தில் பல்வேறு ஆளுமைகளில் நகுலன் மிகவும் முக்கியமானவர், அதனுடன் இன்னொரு வரியும் நாம் சேர்க்கலாம் என்றும் நினைக்கிறேன் அனைத்து விதங்களிலும் நகுலன் மட்டும் வித்தியாசமானவர். கவிதை, சிறுகதை, குறு-நாவல்கள், விமர்சனங்கள், குறுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு என்று நவீன இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் வாய்ப்புள்ள போதெல்லாம் தனது ஆளுமைத்திறனை நிரூபிக்கக் கடைசி வரை இயங்கியவர் நகுலன். இத்தனை புள்ளிகளில் அவர் இயங்கினாலும் எந்தப் புள்ளியிலும் தனது எழுத்தின் அடிப்படை குணாதிசயத்தை மாற்றிக்கொள்ள அவர் முயலவில்லை.
வாசிப்பு படிகளில் மெல்ல மெல்ல ஏறிவரும் இலக்கிய வாசகன் ஒருவனுக்கு எங்கும் கொட்டிக் கிடக்கும் நகுலனின் சில கவிதைகளை திடீரென்று வாசிக்க நேரும்போது ஒருவித மயக்கமும் வெறுமையும் ஒருங்கே வந்து நிற்கிறது. துரதிருஷ்டவசமாக இங்கு உலவும் நகுலனின் சில கவிதைகளை மட்டும் வாசித்துவிட்டு இவ்வளவு தான் நகுலன் என்று முடிவு செய்துவிட்டு அவ்வாசகன் நகுலனைக் கடந்து ஒருவகையில் அவரை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் தனது அடுத்த வாசிப்புக்கான படிகளில் ஏறிவிடும்அபாயகரமான சூழல் தான் இங்கு நிகழ்கிறது.
நிற்க! கனலி வெளியிடும் இந்த நகுலன் 100 தொகுப்பை வாசித்துவிட்டு யாதொரு இலக்கிய வாசகனும் நகுலனை முழுமையாக இன்னும் நிதானமாக வாசித்து உள்வாங்கிட அல்லது நேர்மறை மற்றும் எதிர்மறையான (நகுலன் படைப்புகள் மீதான) தனது கருத்துகளை தங்களுக்குள் உருவாக்கிட இயலும் எனில் அதுவே இந்த தொகுப்பிற்குக் கிடைக்கும் வெற்றியாக நான் கருதுவேன்.
அதேநேரத்தில் நகுலனின் அனைத்து படைப்புகளைப் பற்றியும் அவற்றின் மீதான கருத்துகளும், விமர்சனங்களும் குவிந்து கிடக்கும் தொகுப்பும் இதுவல்ல என்று உங்களுக்கு நான் சொல்லி விடுவேன். இந்த தொகுப்பு அவரவர் பார்வையில் பார்த்து ரசித்த நகுலன் என்கிற ஒளிச்சுடரை கொஞ்சம் நேரம் நீங்கள் வைத்து ரசித்துப் பாருங்கள் என்று உங்கள் கையில் மாற்றித் தந்திருக்கும் தொகுப்பு அவ்வளவே.
Be the first to rate this book.