தங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்களையும் சகித்துக்கொள்ளும் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அதைப்பற்றிப் பேசி, பின் அதை மறந்துவிடுவார்கள். அரசியல்வாதிகளும் தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே புதுப்பித்துக்கொள்வார்கள்.
ஆனால், ஊடகங்கள் மட்டுமே அமைச்சர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை; ஆன்மிகவாதிகள் முதல் ஆண்டிகள் வரை நிகழ்த்தும் தில்லாலங்கடி வேலைகளை அவ்வப்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். அந்த வகையில் விகடனில் வெளியாகும் அரசியல் கட்டுரைகள் அனைத்தும் மக்களின் மனக் குமுறல்களாகவே அமைந்திருக்கும். சாட்டையை எடுத்து விளாசினாலும் தார்க்குச்சி கொண்டு குத்தினாலும் அரசியல்வாதிகள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’த்தான் இருக்கும். ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன் எழுத்தால், சொல் வன்மையால் அவர்கள் மேல் போர்த்தியிருக்கும் பல்வேறு ‘கலர்’ சட்டைகளைத் தோலுரித்துக் காட்டுகிறார் நூல் ஆசிரியர் திரு. ப.திருமாவேலன்.
கடந்த ஐந்து வருடங்களில் விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் கதம்பத் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் தேதி குறிப்பிட்டு இருப்பது, வாசகர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.