“நடைவழி நினைவுகள்’ நவீனத் தமிழிலக்கியத்தின் வளமான தளத்தை வடிவமைத்த படைப்பு சக்திகள் பற்றிய நூல்.
கலை நம்பிக்கையும் படைப்பாக்க மேதைமையும் அர்ப்பணிப்பும் அயரா உழைப்பும் கொண்டியங்கிய 18 ஆளுமைகளின் எழுத்தும் வாழ்வும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
அதேசமயம், அவர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்திலிருந்தும் நட்பிலிருந்தும் அவர்கள் பற்றிய ஆளுமைச் சித்திரத்தை நூலாசிரியர் சி. மோகன் தீட்டியிருப்பது, இந்தக் கட்டுரைகளுக்குப் புது மலர்ச்சியைத் தந்திருக்கின்றன. அவர்களுடைய பிரத்தியேகக் குணாம்சங்களின் வாசனைகளும் வெளிப்பட்டிருக்கின்றன.
நூலின் இந்தத் தன்மை காரணமாக, நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான இந்தப் படைப்பு சக்திகளுடன் வாசகர்கள் மிக அந்நியோன்யமான ஒரு நெருக்கத்தை உணரலாம். மேலும், நூலாசிரியரின் இருபத்தொன்றாவது வயதிலிருந்து அறுபத்தெட்டு வயது வரையான கலை இலக்கிய வாழ்க்கைப் பயணம் இந்தக் கட்டுரைகளில் இழைந்து இழைந்து இணைந்து வந்திருக்கின்றது. ஒவ்வொரு ஆளுமை பற்றிய கட்டுரையும் நான்கு உட்பிரிவுகளாய் அமைந்துள்ளது. இப்படியான ஒரு லயத்துடன் அவர்களுடைய படைப்புகள் குறித்த தீர்க்கமான பார்வைகளையும் அவர்களுடைய தனித்துவ மேன்மைகளையும் மிக நெருக்கமாக இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன.
*
நவீன இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கியவர்கள், புதிதாக வாசிக்க விரும்புபவர்கள் எல்லோருக்கும் எழும் முக்கியமான கேள்வி எந்தப் புத்தகத்தை வாசிப்பது, எதிலிருந்து தொடங்குவது என்பதுதான். தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை உருவாக்க வழிகாட்டியாய் ‘நடைவழி நினைவுகள்’ திகழ்கிறது.
- சித்திரவீதிக்காரன்
Be the first to rate this book.