நபிவழி என்றழைக்கப்படும் சுன்னா, முஹம்மது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாகும். அது, முஸ்லிம்களுக்கு இன்றளவும் நிலையான, ஒழுக்கம் சார்ந்த சட்டகமாகவும் இலக்கணமாகவும் இருக்கிறது; முறையான விதிகள், அகவுணர்வு ஆகியவற்றின் மூலம் எது சரி, தவறு என்பதைத் தெரிந்து கொள்வதற்குரிய நுட்பத் திறனையும் வழங்குகிறது.
எனினும், நபிவழியை வாழ்க்கையின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி
வைப்பது அதை இறுக்கமானது, வழக்கொழிந்தது என்னும் ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடலாம். அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில், மையநீரோட்டத்திற்கு - வெட்கப்பட்டு விலகிச் செல்லாமல் - வழிகாட்டும் திறன்கொண்ட ஒன்றாகவும் சூழலுக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரோட்டமுள்ள மொழியாகவும் நபிவழி எவ்வாறு வாழ்வின் இலக்கணமாகச் செயல்படுகிறது என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
முதலாம் இயல், ஆதாரப்பூர்வமான நடவடிக்கைகள் மூலமாக நபிவழியைக் கடைப்பிடிக்கும் முறைகளின் பண்புக்கூறுகளை உலகப் பொதுமை, ஒத்திசைவு - மனிதப் பொறுப்புகளின் பல்வேறு அம்சங்கள் பிளவுபடாத வகையில் - கருணை பொருந்திய யதார்த்தவாதம், அடக்கம், பணிவு என வரிசைப்படுத்துகிறது.
இஸ்லாமியச் சட்டவியல், அழைப்புப்பணி ஆகிய துறைகளில் நபிவழியைத் தீர்மானிப்பதற்கான தர நிர்ணயங்களையும் நடைமுறைகளையும் விளக்குகிறது இரண்டாவது இயல்.
மூன்றாவது இயல் நபிவழியைப் புரிந்துகொள்வதில் நிலவும் பொதுவான தவறுகளை நுணுக்கமான எடுத்துக்காட்டுகள் மூலம் விவரிக்கிறது - போதிய பின்னணிகள் இல்லாமல் தனியாகப் படிக்கும் பழக்கம், சட்டரீதியான எச்சரிக்கைகளையும் ஒழுக்க ரீதியான எச்சரிக்கைகளையும் குழப்பிக்கொள்ளல், நோக்கங்கள், அவற்றை எட்டுவதற்கான வழிமுறைகள், நேரடிப்பொருள், மறைமுகப்பொருள் அடிப்படையிலான அர்த்தங்கள், மேலும் இந்தத் தவறுகளைச் சரிசெய்வதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது. இதன் மூலம் நபிவழியை நம்பிக்கையுடனும் அறம் சார்ந்தும் புரிந்து கொள்ளவும் பின்பற்றவும் மிகச் சிறந்த அடிப்படைகளை வழங்குகிறது இந்த நூல்.
Be the first to rate this book.