தமிழில் ஒரு முன்னோடியாக அமையும் இந்த நூலில் உலகில் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் முகம்மது நபிகளாரின் சமூக உறவை அறிமுகம் செய்யப்படுகின்றது.
முஸ்லிமல்லாதோருடன் நபிகளார் கொண்டிருந்த சமூக உறவு கிறிஸ்தவ அறிஞரான வராக்கா பின் நவ்பலிடமிருந்து தொடங்குகிறது.
நபிகளாருக்கு மக்காவில் பாதுகாப்பாளராக இருந்த அபூதாலிப், அபிசீனியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களை அரவணைத்த கிறிஸ்தவ மன்னர் நஜ்ஜாஷி, தாயிப் நகரில் கல்லடியும் சொல்லடியும் பட்ட நிலையில் மக்கா திரும்ப உதவிய முத்தீம், ஹிஜ்ரத் பயணத்தில் வழிகாட்டியாக வந்த அப்துல்லாஹ் பின் உரைக்கத் ஆகியோரின் பங்களிப்பு வழியாக நபிகளார் காட்டும் சமூக உறவுக்கான முற்றிலும் புதுமையான பாதையை எடுத்துரைக்கின்றது.
மதீனாவில் ஆட்சியாளராக பொறுப்பேற்ற நிலையில் அங்கு வாழ்ந்த பன்முக சமூகத்தாருடன் நல்லுறவை நிலைநாட்ட நபிகளார் செய்து கொண்ட மதீனா பிரகடனம், யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் மட்டுமின்றி, தாம் பிறந்த மக்கா நகரிலிருந்து வெளியேற்றிய மக்கத்து இறைநிராகரிப்பாளர்களுடன் செய்துகொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை முதலியவற்றை சமூக உறவுகள் கண்ணோட்டத்துடன் அலசுகின்றது இந்தப் புத்தகம்.
நபிகளாரின் அடிச்சுவட்டில் தொடர்ந்துவந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் சமூக உறவுகளை நிலைநாட்டிய பாங்கும் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டிருக்கிறது. நபிகளாரின் சமூக உறவுகள் இந்திய முஸ்லிம்களுக்குக் காட்டும் வழியையும் அனுபவப்பூர்வமாக விவரிக்கிப்படுகிறது.
முத்தாய்ப்பாக, அறப்பணிகள் வழியாக சமூக உறவுகளைப் பலப்படுத்தும் முறைமைகளும் விவரிக்கப்படுகின்றன. நபிகளாரின் இறுதிப் பேருரை சுட்டிக்காட்டும் சமூக உறவுகளும் கோடிடப்பட்டுள்ளன.
நபிகளாரின் வரலாற்றைச் சொல்லும் மற்றொரு நூல் அல்ல இது. பன்முகச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி.
இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று, முஸ்லிம்களின் தனிப்பட்ட அகப் பிரச்சினை. மற்றொன்று, பெரும்பான்மை வாதத்தால் உருவாக்கப்படும் புறப் பிரச்சினை. இந்த நூல் அண்ணலாரின் வாழ்விலிருந்து சமூக உறவுகளைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
- கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர், அரபு மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
களங்களும் தளங்களும் தளர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கின்ற தற்காலத்தில் சமூக நலங்களை நன்கினிது நாட்ட வந்த கலங்கரை விளக்கம் இந்த நூல்.
- முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார்
பிற சமயத்தாருடன் இணக்கமாக வாழ்வதற்கான முன்மாதிரி இஸ்லாத்தில் இருக்கிறது; முஸ்லிம் சமூகம் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறார் நூலாசிரியர்.
- மவ்லவி முனைவர் பி.எஸ். செய்யது மஸ்வூது ஜமாலி, முதல்வர், புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி, சென்னை.
இஸ்லாம் குறித்துத் திட்டமிட்டுப் பரப்பப்படும் பல வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் தெளிவாக பதிலளிக்கிறது இந்தப் புத்தகம்.
- முனைவர் தமீம் உஸாமா, இஸ்லாமியப் பல்கலைக்கழகம், மலேசியா
இந்தப் புத்தகம் சமகாலத் தலைமுறைக்கோர் சமூக அறிவியல் பாடம்.
- அந்தோணி பாப்புசாமி அடிகளார், மதுரைப் பேராயர்.
நபிகளார் உருவாக்கிய முஸ்லிம் என்னும் ஐக்கிய சமூகம் பன்மைச் சமூகத்தில் எத்தகைய உறவு வைத்திருக்க வேண்டும் என்பதைக் காட்டும் இந்தப் புத்தகம், தன் வகைமையில் ஒரு முன்னோடி.
- கலாநிதி அனஸ், தத்துவத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.
மனிதநேயம், சகோதரத்துவம், பிற சமயத்தினருடன் இணக்கமாக வாழ்தல் போன்றவற்றை இந்த நூல் மிகவும் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ற ஆக்கம்.
- மவ்லவி முனைவர் வி. எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
Be the first to rate this book.