மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை. நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின்.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு!
Be the first to rate this book.