இந்தியா ஒளிர்கிறது, இந்தியாதான் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்றெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள்.
அதே நேரம், விலைவாசி உயர்வு, பட்ஜெட் பற்றாக்குறை, பெட்ரோல் டீசல் விலைகள் கடும் உயர்வு, புயல்பாதிப்புக்கு நிவாரணம், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யக் கோரிக்கை, தள்ளுபடி போன்ற செய்திகளும் அடிக்கடி காதில் விழுகின்றன. ஆக, பொருளாதாரம் என்பது ஏதோ பேராசிரியர்களும், வல்லுனர்களும், ஆட்சியார்களும் மட்டும் தெரிந்துகொள்கிற, விவாதிக்கிற விஷயம் இல்லை. அது குறித்து அனைவருமே தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.
தெரிந்துகொள்ள விருப்பம்தான். ஆனால் எழுதப்படுவன புரிந்துகொள்ளும்விதமாக இல்லையே என்ற புகார்களும் இல்லாமல் இல்லை.
அந்தக் கூற்றைப் பொய்யாக்கியவர் டாக்டர் சோம வள்ளியப்பன். பங்குச்சந்தைகள் குறித்ததுமட்டுமல்லாமல், நாட்டு நிகழ்வுகள் மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பட்ஜெட், கச்சா எண்ணை விலை, டாலர் மதிப்பு, வங்கி வட்டி விகிதங்கள், வருமான வரி, ஜி.எஸ்.டி. போன்றவை குறித்து, தொடர்ந்து வெகுஜன பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்களில் பாமரருக்கும் புரியும் விதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
முழுக்க முழுக்க பொருளாதாரம் குறித்து, 'சிக்ஸ்த்சென்ஸ்'க்காக சோம வள்ளியப்பன் எழுதிய நாட்டுக்கணக்கு, வாசகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று பல பதிப்புகள் கண்டிருப்பதைத் தொடர்ந்து, 2004 தொடங்கி 2018 வரை பல்வேறு இதழ்களில் இந்தியாவின் பொருளாதார நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய 59 கட்டுரைகள், நாட்டுக்கணக்கு- 2 ஆக வெளிவருகிறது.
நம் நாட்டின் பொருளாதார நிகழ்வுகள் கடந்து வந்திருக்கும் பாதையை பதிவு செய்யும் ஒரு ஆவணமாக மட்டுமல்லாமல், கட்டுரைகளில் விவரிக்கப்படும் பொருள் குறித்து 2018ம் ஆண்டின் நிலை என்ன என்பதையும்- இந்திய பொருளாதாரம்: அன்றும் இன்றும்- என வாசகரே ஒப்பிட்டுப் பார்த்து, முடிவுக்கு வர உதவும் விதமாக புத்தகம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பயன்தருகிறது.
அரசியல், சமூக, பொருளாதார நோக்கர்கள், விமர்சகர்கள், மத்திய மாநில, வங்கி வேலைகளுக்கு முயற்சிப்பவர்கள் மட்டுமல்லாது, எவருக்கும் பயன்தரும் ஒரு புதிய புத்தகம்.
Be the first to rate this book.