ஈழத்தில் பிறந்து கனடாவில் வசிக்கும் மணி வேலுப்பிள்ளையின் ஆறாவது நூல் ‘நாங்கள்--அவர்கள்’.
ஆள், இடம், காலம், மொழி எனும் நான்கு பரிமாணங்களையும் ஊடறுத்து விரையும் இந்நூல் கி.மு.7ஆம் நூற்றாண்டையும் இன்றையும், மேற்குலகையும் தமிழ்ப்பரப்பையும், ஹோமரையும் காளிதாசனையும் தமிழனுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றறிஞர் எரொடொட்டஸ் எழுதிய வரலாற்று நூல், 20ஆம் நூற்றாண்டில் அம்பலவாணர் சிவானந்தன் வரைந்த வரலாற்று நாவல், சாக்கிரட்டீஸ் பேட்ராண்ட் ரசல், மேல்நாட்டு மெய்யியல் வரலாறு போன்ற பல தளங்களில் நூல் இயங்குகிறது.
ரோசா லக்சம்பேர்க், மாயக்கோவஸ்கி, அலந்தே, டெங்சியாவோபிங் போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் அன்றைய, இன்றைய கருத்தியல் நிலைப்பாடுகளையும் முரண்பாடுகளையும் ஒருங்கே புலப்படுத்துபவை. 16ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் ஏதியன்தொலே வகுத்த மொழிபெயர்ப்பு விதிகளும், 20ஆம் நூற்றாண்டில் தமிழாக்கம் பற்றி பாரதியாரும் விபுலாநந்தரும் காட்டிய தமிழாக்க வழிமுறைகளும், நோம்சோம்ஸ்கி நிர்ணயித்த மொழியியல் நெறிகளும் தமிழுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. போப்பையர், டபிள்யு. எச்.ட்றூ, வ.வே.சு.ஐயர், பி.எஸ்.சுந்தரம் ஆகியோரின் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் ஒப்புநோக்கப்பட்டுள்ளன.
வாசகர்களைச் சிக்கலான, கூரிய நோக்குகள் ஊடாடும் தளங்களுக்கு அழைத்துச் செல்லும் நூல்கள் தமிழில் இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு ‘நாங்கள்-&அவர்கள்’ பதிலாக இருக்கும்.
Be the first to rate this book.