நான் யார்?
நான் அல்லது சுயம் என்பது ஒரு தனிநபர்- அவரைப் போன்றதொரு பொருள் அல்லது அவருடைய சொந்த பிரதிபலிப்பு உணர்வுநிலை.
இந்தப் புத்தகம், 173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் நான் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறது.
இதைப் புகழ்பெற்ற ஜென்குரு ஆமா சாமியின் சீடரான கேரன் சிவன் தொகுத்துச் செம்மைப்படுத்தியிருக்கிறார்.
ஜென், அனுபவ ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தியானம், அறம் என்பவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவ அறிவை முதன்மைப் படுத்துவதால், கோட்பாட்டு அறிவுக்கு இது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சொற்களில் தங்கியிராத, மத நூல்களுக்கு அப்பாற்பட்ட அறிவு பற்றியே பேசுகிறது.
ஜென் கதைகளைப் படிப்பது ஒரு கலை. அது ஒரு படைப்புச் செயல். அவை மனிதத் தேடலையும் ஏக்கத்தையும் பேசும் முடிவற்ற கதைகளாக இருப்பதோடு மனித இன்பவியல், துன்பவியல் நாடகங்களாகவும் இருக்கின்றன. அவர்கள் சொல்லும் கதைகளும் கேட்கும் கேள்விகளும் இங்கும், இப்போதும் நிகழ்கின்றன. ஜென் கதைகள் காவிய வகையைச் சேர்ந்தவை அல்ல, அவை சின்னஞ் சிறியதாக, சட்டென்று முடிபவையாக, கொடுத்து வாங்கும் நேரெதிராகப் பேசும் உரையாடல்களாக உள்ளன; அவை திரும்பத் திரும்பவரும், முரண்பாடுகளாகவும் சவால்களாகவும் இருக்கின்றன.
வாசகரே! அவை உங்களுடைய கதைகள், உங்களுடைய கேள்விகள்; அவை உங்களுடைய உலகத்தையும், வாழ்க்கையையும், உறவுகளையும் பேசுகின்றன.
தயவுசெய்து, கதவைத் திறந்து உள்ளே நுழையுங்கள்.
ஆனால் நீங்கள் வெளித்தோற்றத்துக்கு அமைதியாகவும் நிசப்தமாகவும் உள்ள வனத்துக்குள் நுழைவது போலிருக்கும். அதேசமயம் உண்மையில் அவை இருண்ட, மயக்கிக் கவரும் வனமாகவும் இருக்கும். அங்கே உங்கள் வாழ்க்கையே பணயமாகிவிடலாம், எச்சரிக்கையோடு இருங்கள்!
அன்பு என்றால் என்ன?
‘அன்பு என்பது என்ன?’ என்று ஒரு மாணவன் சங் ஸான் சோயென்-சாவிடம் கேட்டான். ‘நான் உன்னிடம் கேட்கிறேன்: அன்பு என்பது என்ன?’ சோயென்-சா கேட்டார். மாணவன் மௌனமாக இருந்தான். ‘இதுதான் அன்பு’ என்றார் சோயென்-சா. அந்த மாணவன் இன்னும் மௌனமாக இருந்தான். சோயென்-சா சொன்னார், ‘நீ என்னிடம் கேட்கிறாய்: நான் உன்னிடம் கேட்கிறேன். இதுதான் அன்பு.’
Be the first to rate this book.