மெட்ராஸ் என்னும் சென்னையை நான் ஒன்றுபட்ட இந்தியாவாகத்தான் பார்க்கிறேன். பல்வேறு இன மொழி பேசும் மக்கள் வாழும் இந்நகரின் மறைத்து போன கிராமங்களின் மனிதர்களை இன்னும் நான் தேடிக்கொண்டே இருக்கிறேன். பட்டினத்தாரும் வள்ளலாரும் குனங்குடி மஸ்தான் சாகிபும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் வசித்த கலாச்சார மதிப்புமிக்க வடசென்னையின் தற்கால வாழ்க்கையையும், அதன் அறியப்படாத மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளையும் சொன்ன விதத்தில் மிக மிக முக்கிய இலக்கியப் பங்களிப்பாக பாக்கியம் சங்கரின் நான் வடசென்னைக்காரன் புத்தகத்தை உறுதியாகச் சொல்லமுடியும். இந்நூலில் சென்னை வாழ் மனிதர்களை மட்டும் பேசாமல் நகர தெருக்களின் ஜோடனைகளையும், பல இனக்கூட்டு கலாச்சாரத்தையும், நகரத்து எளிய மனிதர்களின் சொல்லாடலான மெட்ராஸ் தமிழை இன்னும் ஆழமாக தமிழிலக்கியத்திற்கு அறிமுகம் செய்ததும் எனப் பல வகைகளில் வடசென்னைக்காரன் பாக்கியம் சங்கருக்கு படைப்புலகில் ஓர் தனியிடம் உண்டு.
- அனீஸ், திரைப்பட இயக்குனர்
சென்னை மாநகரில் நெரிசல் நடந்துபோகிற ரோட்டில் மட்டும் அல்ல மக்களின் வாழ்க்கையிலும்தான். சமூகத்தின் அடித் தளத்தில் வளைந்து நெளிந்து வாழ்க்கையை நடத்தும் அவர்களின் வாழ்வில்தான் எத்தனை விதமான உணர்வுகள்?அதிலும் சென்னையின் வடசென்னையில் அதிகமாகச் சாமான்ய மக்கள் வாழ்வதால் வாழ்க்கையும் அங்கே வேறுபடுகிறது.
அத்தகையவர்களில் ஒருவரான பாக்கியம் சங்கர் தன்னைச் சுற்றிச் சுழன்றவர்களை அப்படியே கதாபாத்திரங்களாக வடித்திருக்கிறார். மதுவும் பாலுறவும் இயல்பாகக் கலந்து ஓடும் இந்த உண்மைக் கதைகளில் கழிப்பிடக் காண்டிராக்டர் ஆராயி, அவரது காதலர் மயானத் தொழிலாளி கலியன், பர்மா பஜார் பாலியல் தொழிலாளி இல்லாமல்லி என வருகிற பாத்திரங்கள் எல்லாம் நம்முன் நடமாடுபவர்கள்தான். ஆனால், அவர்களின் வாழ்க்கைக்குள்ளே இருக்கிற அழகியலும் துன்பங்களும் நாம் அறியாதவை.
ஒரு திரைப்படத்தில் பிச்சைக்காரர்களை நடிக்க வைப்பதற்காக எடுத்த முயற்சிகளின் அனுபவங்களும் கதையாகியிருக்கிறது. அதில் மசூதியில் பாயாகவும் கோயிலில் சைவப்பழமாகவும் இருப்பவர் இருக்கிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை உதறித்தள்ளியவர் இருக்கிறார்.
சென்னையின் அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதைகள்.
- நீதி
Be the first to rate this book.