சாதி, மொழி, இனம், பண்ணையடிமை, காதல், பஞ்சம் எனப் பல காரணங்களுக்காக பல காலமாகவே சொந்த நிலங்களைக் கைவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஊர் திரும்பும்போது அங்கு யாரும் இருப்பதில்லை.
மாநகர வாழ்க்கையில் கேள்விப்பட்ட கதைகளும், பயணங்களினூடாகத் தூர்ந்த கிராமங்களையும் கூரை விழுந்த வீடுகளையும் குழந்தைகளற்ற தெருக்களையும் கைவிடப்பட்டு வானத்தை வெறித்தபடி அமர்ந்திருக்கும் மூதாட்டிகளையுமே காட்சிகளாகக் கண்டதும் எழும்பிய உணர்வுகளே,
'நான் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்; ஆனால் அங்கு யாரும் இல்லை’ – சிறுகதை.
இதோடு இன்னும் சில சிறுகதைகளை இணைத்து இதே தலைப்பில் தமிழ்வெளி வெளியீடாக எனது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.
இந்த சிறுகதைத் தொகுப்பு எனக்கு மனநிறைவான தொகுப்பே! இதற்கு முன் வெளியான இரண்டு தொகுப்பும் நண்பர்களின் விருப்பங்களுக்கு அடி பணிந்ததால் மன நிறைவாக வரவில்லை.
இத்தொகுப்பின் மன நிறைவுக்குக் காரணம் மகத்தான புகைப்படக் கலைஞன் அமரர் இசக்கி அண்ணாச்சியின் பொக்கிஷப் புகைப்படம் ஆகும்.
புத்தகம் வந்து சில நாட்களிலேயே பரவலாக அறிமுகமாகி இருப்பதும் மனதுக்கு இதமாக இருக்கிறது.
- அப்பணசாமி
Be the first to rate this book.