அவினாசிலிங்கம் கோவையில் இராமகிருஷ்ணா வித்யாலயம் என்னும் பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். காந்தியடிகளோடு பயணம் செய்த தி.சு. அவினாசிலிங்கம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் இவர். இவருடைய முழுப்பெயர் திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராகப் பணியாற்றியவர். காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களில் பங்கெடுத்து சிறைபுகுந்தவர். 1934இல் தமிழகத்துக்கு வந்திருந்த காந்தியிடம் அரிசன நலவாழ்வு நிதிக்காக இரண்டரை லட்சம் ரூபாயை நன்கொடையாகத் திரட்டி அளித்தார். 1946 முதல் 1949 வரை மதராஸ் மாகாணத்தில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வியை முதன்முதலாக அறிமுகம் செய்தவர். கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர். சமுதாயச் சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர்.
1927 ஆம் ஆண்டில் முதன்முதலாக காந்தியடிகளைச் சந்தித்தார் அவினாசிலிங்கம். 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட யுத்த தளவாடங்களை ஒப்படைக்க வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த சமயத்தில் அவருடைய இறுதிச்சந்திப்பு நிகழ்ந்தது. இடைப்பட்ட காலத்தில் எண்ணற்ற சந்திப்புகள். அந்த அனுபவங்களையெல்லாம் அவர் ‘நான் கண்ட மகாத்மா’ என ஒரு நூலாக எழுதினார். பிரார்த்தனைகளிலும் கீதையின் வரிகளிலும் காந்தியடிகளுக்கு இருந்த ஆழமான நம்பிக்கையைப்பற்றி தனியாக ஓர் அத்தியாயமே எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான ‘வைஷ்ணவ ஜன் தோ’ பாடலின் தமிழ்மொழிபெயர்ப்பு (சுதந்திரச்சங்கு சுப்பிரமணியன்) அந்த அத்தியாயத்தில் இடம்பெறுகிறது.
- பாவண்ணன், ‘சத்தியத்தின் ஆட்சி: காந்திய ஆளுமைகளின் கதைகள்’ நூலிலிருந்து
Be the first to rate this book.