“கலையும் உணர்ச்சியும் இணையும்போதுதான் நல்ல பண்பாடும் நாகரிகமும் வளர்கின்றன. நமது கடமைகளைச் செவ்வனே செய்வோம். ஒருவன் தன்னை மட்டுமே நினைக்காமல் சூழ்நிலையில் உள்ள மற்றைய மனிதர்களையும் நினைத்து அவர்களுக்காகப் பணி செய்வதால் நாட்டின் பொதுத் தொண்டனாகிறான் இந்த உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வேண்டாமா?’’ தமிழக அரசியல் வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக இன்னும் ஜொலித்துக்கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொன்னதே மேற்கண்ட வரிகள். ‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்!’ என்ற சீத்தலைச் சாத்தனாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் மூலம் எண்ணற்ற குழந்தைகளின் பசிப் பிணி அகற்றி, வள்ளலார் வழி நின்று வாடிய குழந்தைப் பயிர்களின் வாட்டத்தைப் போக்கியவர் அவர்.
நாடக சபையில் தன் வாழ்வைத் துவக்கி, தமிழக சட்டசபையை அவர் பிடித்தது எப்படி? நடிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? கலைஞர்களின் கடமைகள் என்ன? அரசியல்வாதிகள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? இதோ ‘நான் ஆணையிட்டால்’ என்ற இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். விவரிக்கிறார். அவர் நாடகத்துக்கு வந்த காலம் முதல், தமிழகத்தின் சிம்மாசனத்தைப் பிடித்தது வரை தான் கடந்து வந்த பாதையை பல கால கட்டங்களில், பல மேடைகளில் பேசிய உரைகளின், கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
எண்ணத்தைச் செயல்படுத்தி நினைத்ததை முடித்து, சாதித்துக் காட்டிய எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியத்தை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதை உணர்ந்து எம்.ஜி.ஆரின் உரைகளைச் சிறப்பாகவும் கால வரிசைப்படியும் தொகுத்துள்ளார் எஸ்.கிருபாகரன். இந்த நூலைப் படிக்கும்போது தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரின் பங்கு எத்தகையது என்பதையும், சாமானியன் சரித்திரத் தலைவன் ஆனதையும் நிச்சயம் அறியலாம்!
Be the first to rate this book.