இந்தத் தொகுப்பில், "எப்போதும் முதல்முறை போல நடித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது" என்று உடலுறவு குறித்த ஒரு கவிதை உள்ளது. அதுதான் இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கவிதை என நான் நினைக்கிறேன். ஒரு பெண் உடலுறவை ஒரு சரித்திர பாவனையோடு, தன்னிடம் உறவு கொள்ளும் ஆணிடம் நடித்தபடியே இருக்க வேண்டியுள்ளது. வாழ்வதைப் போல நடிப்பதைக் காட்டிலும் உடலுறவில் இதுவே முதல் முறை என நடிக்கும்போது அவள் மனநிலை என்னவாக இருக்கும்? அவளுடைய உடலை அடைந்தபடி இருக்கும் ஒருவனுக்கு, அவள் அந்த உடலுறவின் உணர்வை முதல்முறையாக அனுபவிக்கிறாள் என்ற நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஒரு பெண்ணின் மனநிலையை எப்படியெல்லாம் சிதிலமடையச் செய்யும் என்பது குறித்து யாருக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?
இங்கு இருக்கக்கூடிய கலாச்சார விழுமியங்களின் அழுத்தங்களுக்கு ஆட்படும் ஒரு பெண்ணின் மனநிலை அவள் வாழ்ந்து இறக்கும் அந்தக் கடைசி நொடியில் பல காத தூரங்கள் பயணப்பட்டு நிற்கும் பழுதுபட்ட வாகனத்தின் துருப்பிடித்த மனநிலையை ஒத்திருக்கும் என்பதே நிஜம். இந்தக் கவிதைகள் அதைப் பறைசாற்றுவதாகவே இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் மிகப்பெரிய பலமே ஒப்பனைகள் ஏதுமற்ற உணர்வுகளை இவை தொடர்ந்து கைப்பற்றி இருப்பதுதான்.
- எழுத்தாளர் தமயந்தி
Be the first to rate this book.