கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனுபங்களை வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் வி.எஸ்.நடராசன். முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள், பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் என்று முதியோர் மருத்துவம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழிவகை சொல்கிறது இந்த நூல்.
முதுமை எப்போது ஆரம்பிக்கிறது தொடங்கி இறப்பு வரை முதியவர்களுக்கு வரும் நோய்களான மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம், மறதி நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, மலச்சிக்கல், தோல் நோய்கள், கண் நோய்கள், காது&மூக்கு&தொண்டை நோய்கள் என்று பல்வேறு நோய்களுக்கும், முதுமையில் நலமாக வாழ உதவும் பரிசோதனைகள், உணவுகள், உடற்பயிற்சிகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை குறித்தும், முதுமையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் சந்தோஷமாக வாழலாம் - முதுமையும் ஒரு சுகமே என்பதையும், மிகவும் இயல்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியுள்ளார் டாக்டர். வி.எஸ்.நடராசன.
முதியவர்களில் பலரும் தங்களின் சிறு சிறு சந்தேகங்களுக்கு டாக்டர்களிடம் ஆலோசனை பெறத் தயங்குகிறார்கள். அப்படி கேட்டாலும் அவர்களுக்கு தெளிவாக, சுருக்கமாக சொல்லத் தெரிவதில்லை. டாக்டர்களுக்கும் மிகவும் பொறுமையாக அவர்களுக்கு எடுத்துக் கூற நேரம் கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியவர்களிடம் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளித்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் என்றால், நோய் வராமல் இருக்க தகுந்த உணவு, உடற்பயிற்சி, பாதுகாப்பு போன்ற நோய்த் தடுப்பு முறையால் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துபவர் சிறந்த மருத்துவர்.
டாக்டர் வி.எஸ்.நடராசன் சிறந்த மருத்துவர் என்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. நூறு மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை. அரிய பயனை அள்ளித் தரும் இந்த நூல், உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டியதும் நலமே!
Be the first to rate this book.