சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை. ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அபப்டியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.
இரண்டு, நாடகம் என்பது அடிப்படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான், அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. இதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே. மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது.
இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை. -ஜெயமோகன்.
Be the first to rate this book.