அறிவின் அடிமையாக மாறிப் போன சமூகம் அச்சுறுத்தல்களினால் ஆளப்படுகிறது. அறிவு அதற்கான ஆயுதமாக்கப்படுகிறது. அறிவை அடக்கி, பேராற்றலிடம் சரணடைந்தோருக்கு எளிமையான வழிகள் காட்டப்படுகின்றன. தமிழ் மரபில் சித்தர்கள் இப்படித்தான் பேராற்றலுடன் உறவாடினார்கள், உரையாடினார்கள், இப்படித்தான் அண்டத்தைப் பற்றி அறிந்துகொண்டார்கள், இப்படித்தான் அணுவைப் பற்றி அறிந்துகொண்டார்கள். அறிவின் பிடியிலிருந்து வெளியேறி இயற்கையிடம் சரணடையுங்கள், அறிவைக் காட்டிலும் விருப்பங்களே வலிமையானவை என்பதற்கான ஒரு வரி சுருக்கமே “முதல் பழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை”.
இயற்கைக்கு ஆற்றல் உண்டு, நம்மைக் காட்டிலும் பெரிது, அதுவே பேராற்றல் என்றால் பகுத்தறிவுக்கு ஆத்திரம் வருகிறது. மனிதனைக் காட்டிலும் பெரிய ஆற்றல் என்ன இருக்க முடியும் என அது கொக்கரிக்கிறது. நீங்கள் மனப்பூர்வமாக, இப்புவியை நேசித்து வாழ விரும்பினால், பகுத்தறிவின் பிடியிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை. வெப்பக் கோளமாக இருந்த பூமியில், நானூற்றுப் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்தது. அதுவே பூமியின் முதல் மழை. அப்போது பூமியில் மரங்கள் இல்லை. மரங்கள் மட்டுமல்ல, பூமியில் அப்போது எந்த உயிரினமும் இல்லை. ஆகவே, மரங்களால் மழை பெய்வதில்லை, மரங்கள் உள்ளிட்ட உயிர்கள் வாழ்வதற்காக மழை பெய்கிறது.
பூமியில் உயிர்கள் தோன்ற வேண்டும் என்பது இயற்கையின் பேராற்றலின் விருப்பம். அந்த விருப்பத்திற்காக மழை பெய்தது. அந்த விருப்பத்தினால், உயிர்கள் தோன்றின.
மழை எப்படிப் பெய்கிறது என ஆராய்ச்சி செய்யும் மனிதர்கள் மழையை உருவாக்கிவிட முடியாது. எந்த ஆராய்ச்சியும் செய்யாத மரங்களால் மழையை வரவழைக்க முடியும். எந்த உயிரும் இல்லாத இடத்திலும் மழை பொழிவிக்க பேராற்றலால் முடியும். அந்த இடத்தில் உயிர்களை உருவாக்கவும் பேராற்றலால் முடியும். எனவே, விருப்பத்தில் இருங்கள். உங்களுக்காகவும் மழை பொழியும்!
Be the first to rate this book.