ஒரு துக்கம் தொண்டையை அடைக்கும்போது பேச்சு வருவதில்லை. ஆனால், கண்ணீர் வெளியே வருகிறது. இமைகள் நனைந்த ஈரத்தைக் கடும் வெயிலும் உலர்த்திவிட முடியாது. காரணம், அது இதயத்தின் துக்கம் உறைந்த குளிரில் நடுங்கித் தவித்துக்கொண்டிருக்கும். அந்த ஈரக் கண்ணீர் ஒரு பிரியமானவரின் மரணத்தால் அதிர்ச்சியுடன் வலி மிகுந்து வெளியேறும்போது பலர் மார்பில் அடித்துக் கொண்டு அதை வலி நிவாரணி என்று நினைக்கிறார்கள். தரையிலோ சுவரிலோ தலையை முட்டி ஒப்பாரிக் கூச்சலிட்டு இறைவனையே திட்டித் தீர்த்து ஓய்ந்து துவண்டு விழுகிறார்கள். கலகம் செய்பவர்களும் உண்டு. இவையெல்லாம் மரணித்தவரின் அந்தஸ்தைப் பொறுத்து அளவிடப்படுவது.
உயிர் பிரிந்து நம்மைவிட்டுப் போனவர்கள் ஒரு முட்டை ஓட்டின் சில்லுகள்போல நம்மை இங்குச் சிதறவிட்டு நம்மிலிருந்து உடைத்து வெளியேறிப் பறந்துவிடுகிறார்கள். நபிகளாரை இழந்த மரணப் பிரிவு இந்த சமூகத்தையே நொறுங்கிய முட்டை ஓட்டுச் சில்லுகளாகத் தாக்கம் செலுத்துகிறது. ஆனால், அது அழிவின் அடையாளம் அல்ல. நமது உடலும் உயிரும் யாருடன் உலவி வலம் வந்து உண்டு சிரித்து அழுது உறவாடிச் சுவாசித்தனவோ, அந்தத் தாய் தந்தை, சொந்தங்கள், நட்புகள், சொத்துகள் அனைத்தையும்விட, நமது உயிரைவிட நபிகளாரின் அந்தஸ்து நமக்குள் அளவின் எல்லையைத் தாண்டிய ஒன்றல்லவா? ஆகவேதான், அவர்களின் மரணத் துக்கத்தை நேரில் அனுபவித்த நபித்தோழர்களிடம்கூட அது நபிக்கு மாறுசெய்கின்ற போக்கில் வெளிப்படவில்லை. ஏன், இன்றும் ஒரு முஸ்லிம் இழவு வீடு முற்றிலும் மாறுபட்ட துக்கத்தின் தாக்கத்தை முன்வைக்கின்றது. ஒப்பாரி இல்லை. இறைநிராகரிப்புக் கூச்சல் இல்லை. நபியின் தாக்கம் துக்கத்திலும் தாக்கம் செலுத்துகிறதெனில், அவரை இழந்த துக்கத்தின் தாக்கம் எப்படியெல்லாம் நமக்குள் வினையூக்கியாக வேலை செய்யவேண்டும்? இதை ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷாவின் துயர உபதேசங்களுடன் வாசிக்கும்போது அது நம்மை புதிய முஸ்லிமாக உயிர்ப்பிக்கிறது.
Be the first to rate this book.