வரலாற்றின் மீதும், நடைமுறை அரசியல் அபத்தங்கள் மீதும் நடைபோடும் புனைவுதான் ‘முகிலினி’. பவானி சாகரம் அணைக்கட்டு கட்டப்படும் காலகட்டத்தில் தொடங்கும் நாவல், கோவையின் வரலாற்றுடன், 1949 தொடங்கி சுமார் 60 ஆண்டு காலத் தமிழக, இந்திய வரலாற்றைப் பதிவுசெய்கிறது.
இந்திய சுதந்திரத்துக்கு பின்பு கோவையில் பஞ்சுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகச் செயற்கை இழை (ரேயான்) தொழிற்சாலை தொடங்கப்படுகிறது. அதன் பின்பு கோவையின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் எல்லாம் எப்படி மாறின என்பதுதான் நாவலின் மையக் கரு. இதனூடாக இரண்டாம் உலகப் போரின்போது இங்கு நிலவிய சூழல், அந்தப் போரில் காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, இடதுசாரிகளின் செயல்பாடுகள், கோவை மில் தொழிலாளர்களின் போராட்டங்கள், அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள், உயிர்ப் பலிகள் ஆகியவற்றைப் பல்வேறு கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாக நுட்பமாக விவரிக்கிறது நாவல்.
தமிழகத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது விதிக்கப்பட்ட விதிமுறைகள், கோவையில் பிளேக் நோய் பரவிக் கொத்துக் கொத்தாக மக்கள் செத்தது, பவானிசாகர் அணை வற்றும்போது அதில் நடந்த கம்பு விவசாயம், அதற்காக நடந்த பயங்கரமான சண்டைகள், உயிர்ப் பலிகள், பின்பு அரசாங்கமே குத்தகைக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுத்தது, தெங்குமரஹெடா மலைக் காடுகளில் பழங்குடியினர் வாழ்க்கை என்று பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பதிவு செய்திருப்பது நாவலின் சிறப்பு.
விஸ்கோஸா தொழிற்சாலை இழுத்து மூடப்பட்ட பின்பு இறுதிக் காலகட்டத்தில் மக்களாலும் கொள்ளைக் கும்பலாலும் சூறையாடப்பட்ட நிகழ்வுகள் திகில் கலந்த சுவாரசியத்துடன் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இடையிடையே நொய்யலின் அன்றைய தூய்மையான பிரவாகத்தையும் பவானியின் பிரமாண்டத்தையும் மோயாற்றின் சீற்றத்தையும் படிக்கும்போது இன்றைய நிலையை நினைத்து ஆதங்கம் பொங்குகிறது.
பெரும்பாலும் கோவையில் 45 வயது தாண்டியவர்கள் மட்டுமே விஸ்கோஸா தொழிற்சாலை விவகாரத்தை அறிந்திருப்பார்கள். சிறுமுகையில் பவானிக் கரையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை பன்னாட்டு நிறுவனத்தின் கைகளுக்குச் சென்ற பிறகு ஏற்பட்ட சுற்றுச்சூழல் கேடுகளை மிக விரிவாக விவரிக்கிறது நாவல். தொழிற்சாலையிலிருந்து கந்தகம் உள்ளிட்ட ரசாயனக் கழிவுகள் கரிய நிறத்தில் பவானியில் கலந்ததையும் ஆறு முழுவதும் கறுப்பாக மாறியதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்ததையும் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது.
அதைத் தொடர்ந்து பவானி ஆற்றைக் காக்க நடந்த போராட்டங்களைப் பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர். அந்தப் போராட்டக் கதாபாத்திரங்களில் சுந்தரம், செல்லசாமி (செல்லப்பா), மோகன்குமார் (மீசை இல்லாத தலைவர்), ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம் (பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்), மறைந்த நம்மாழ்வார் ஆகிய நிஜக் கதாபாத்திரங்களையும் சேர்த்திருப்பதை அவர்களுக்குச் செய்திருக்கும் மரியாதையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயத்தையும், அது வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களையும் அலசியிருப்பது நாவலின் சிறப்பு.
Be the first to rate this book.