பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 2006-ம் ஆண்டு பெற்ற முகமது யூனுஸின் பிரமிப்பூட்டும் வாழ்க்கை வரலாறு இது. ஏழைமையில் வாடும் பங்களாதேஷ் மக்களுக்கு எந்த ஆட்சியாளராலும் தரமுடியாத பொருளாதார விடுதலையை இந்தத் தனிமனிதர் தந்திருக்கிறார். கிராமீன் வங்கி. அவர்கள் வாழ்வை அடியோடு மாற்றியமைத்த மந்திரச்சொல் இதுதான். ஒரு வங்கி பெரிதாக என்ன செய்துவிடும்? மிஞ்சிப் போனால் கடன் கொடுக்குமா? ஆம். கடன் கொடுக்கும்தான். ஆனால் உலகில் எந்த நாட்டில் வங்கிகள் ஏழைகளைத் தேடித்தேடிப்போய் கடன் கொடுக்கிறது? அதுவும் வட்டிச் சுமையால் கழுத்தை நெரிக்காமல்? கிராமீனுக்கும் பிற தேசிய வங்கிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான். கிராமீன் ஏழைகளுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறது. கிராமீன் கைகொடுத்ததால், பங்களாதேஷில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் ஏழைமையின் பிடியிலிருந்து மீண்டிருக்கிறார்கள். சமகாலத்தில் மட்டுமல்ல; எக்காலத்திலும் இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்ததில்லை. ஓர் அரசாங்கத்தால் கூட சாதிக்க முடியாத பல சாதனைகளை அநாயசமாகச் செய்து முடித்திருக்கிறார் முகமது யூனுஸ். கடன் கொடுப்பதோடு இவரது வங்கியின் பணி முடிவடைவதில்லை. கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் என்று பரந்துபட்ட தளத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்று. ஏழைகளுக்குத்தான் உதவி. ஏழைகளுக்கு மட்டுமே. பங்களாதேஷிலிருந்து அமெரிக்கா வரை கிளை பரப்பியிருக்கிறது யூனுஸின் வங்கி. யூனுஸ் கடன் கொடுக்கப் போனபோதுதான் அமெரிக்காவில் எத்தனை லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள் என்கிற விவரமே உலகுக்குத் தெரியவந்தது! முகமது யூனுஸின் அசாதாரணமான வாழ்க்கையையும் கிராமீன் வங்கி உருவான கதையையும் ஒருசேர விவரிக்கிறது இந்நூல். ஒரு தனி மனிதரால் சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சிலிர்ப்பூட்டும் சாதனைச் சரித்திரம்.
Be the first to rate this book.