உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை, ஒருவராலும் வரையறுத்துச் சொல்லமுடியாத அம்சமாகக் காமம் விளங்குகிறது. ஒரே நேரத்தில் எள்முனையளவு சிறிதாகவும் மலையளவு பெரிதாகவும் தோன்றி மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது காமம்.
காமத்தைக் கோடாரிக்கு நிகரான ஒன்றாகச் சித்தரிக்கிறார் திருவள்ளுவர். தன் முன்னால் கிடப்பது மரமா, சிற்பமா, கொடியா, செடியா என்பது கோடாரிக்கு ஒரு பொருட்டே இல்லை. பிளந்து வீசுவதையே தன் நெறியெனக் கொண்ட ஆயுதம் கோடாரி. நாணமென்னும் தாழ்ப்பாளால் அடைபட்டிருக்கும் கதவுகள் எல்லாம் ஓங்கிய கோடாரிக்கு முன்னால் ஒரு பொருட்டே அல்ல. அந்த விசையில் சுக்குநூறாகச் சிதைத்த பிறகே கோடாரி அமைதிகொள்ளும்.
பிறழ் உறவு என்பதை சமூகம் ஒழுக்கவியல் பார்வையின் அடிப்படையில் மதிப்பிடுகிறது. ஆனால் இலக்கியத்திடம் அப்படிப்பட்ட எந்த அளவுகோலும் இல்லை. பிறழ் உறவு உள்ளவர்கள் அதைக் கடந்து அவர்கள் என்னவாக எஞ்சுகிறார்கள் என்பதைத்தான் இலக்கியம் கணக்கிலெடுத்துக் கொள்கிறது. பிறழ் உறவில் தொடங்கி, பிறழ் உறவிலேயே திளைத்து முடிந்து போகிறவர்களை இலக்கியம் பொருட்படுத்துவதில்லை. ஆனால் பிறழ் உறவுக்கு அப்பால் ஏதோ ஒரு பணியில் தன்னை இழக்கிறவர்களைப் பொருட்படுத்துகிறது. கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
மாபெரும் துயரங்கள் காதல் வாழ்க்கையின் பாதையை மாற்றுமா என்றொரு கேள்வி எழலாம். சமூகமரபு வேண்டுமென்றால் அக்கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லலாம். ஆனால் மாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு என்பதே அக்கேள்விக்கு இலக்கியம் அளிக்கும் பதில்.
- பாவண்ணன்
Be the first to rate this book.