தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது.
அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.
செல்வச் செழிப்பில் வளர்ந்த வேதாந்தம், திடீரென்று வரும் சரிவு-களால்உருவாகும் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் காதலுக்கும் இடையேசந்திக்கும் சவால்கள்தான் எத்தனை! வேண்டாத மனிதர்கள் உருவாக்கும் பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து,காதலி செல்லத்தைக் கைப்-பிடிக்கிறான் வேதாந்தம்.
இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் ‘மிஸ்டர் வேதாந்தம்’தொலைக்காட்சித் தொடராகவும் வந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன் பாலா சாரை அவருடைய அலுவலகத்தில் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். உரையாடலின் ஊடே, உன் Blog பேர் என்னவென்று கேட்டார். சொன்னேன். முதல் கட்டுரையாக ‘தேவன் “மகா”தேவன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருந்தது. முழுக்கவே விக்கிபீடியாவில் இருந்து தொகுத்த தகவல்கள். அதற்கே அவர் பாராட்டினார். இதோ, இப்போது தேவனின் நூல்கள் சிலவற்றைப் படித்தவன் என்கிற முறையில் எனது இந்தப்பதிவை அழுத்தமாக, மகிழ்ச்சியாக எழுதுகிறேன்.
அப்போது நூலகத்தில் தோழர் அர்ஜூனோடு உலாவுகையில் நூலகத்தின் புதுவரவுகளாக துப்பறியும் சாம்பு புத்தகம் நேர்த்தியான வடிவமைப்பில் காட்சியளித்தது. அவ்வளவுதான்! புத்தகத்தைக் கைப்பற்றிய நாங்கள் அடுத்த 50 நாட்களுக்கு நூலகத்தில் வைக்கவே இல்லை. தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தோம். பளபளவென்றிருந்த அந்நூல் சற்றே பழுப்பேறியிருந்தது. 50 கதைகளையும் சுவைத்துப் படித்தோம், தொலைக்காட்சியில் தொடராக, மேடை நாடகங்களாகவும் வந்துள்ளதாம். வேறென்ன சொல்ல?
அதே நூலகத்தில் மிஸ்டர் வேதாந்தம் நூலையும் எடுத்து மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறோம். அதுகுறித்து, அதில்வரும் கேரக்டர்கள் பற்றி, (குறிப்பாக மிஸ்டர்.சுவாமி பற்றி) அடிக்கடி உரையாடியுள்ளோம். அதில்வரும் கடித சம்பாஷணைகள், ஹாஸ்யங்கள், திடுக் திருப்பங்கள் எல்லாவற்றோடும் நிதானமாக நீந்தியுள்ளோம். அது ஒரு தொடர்கதையாக தொலைக்காட்சியில் கூட வந்துள்ளதாம்.
மாலதி என்கிற சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பு தோழர் சிதம்பரம் மூலமாக எனக்கு கிடைத்தது. சின்னச் சின்ன இடைவெளிகளில் எதிர்பாராத கேரக்டர்கள் மூலமாக கலீரென சிரிக்க வைக்கும் வித்தை அவர் பேனாவுக்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. வெவ்வேறு கதைமாந்தர்களின் ஊடே மெலிதான நகைச்சுவை மிளிர எப்படி எழுதினாரோ? என்று பலமுறை எண்ண வைக்கிறார்.
அண்ணன் ஓஜஸ் மூலமாக ஜஸ்டிஸ் ஜகந்நாதன் படித்தேன். ஒரே ஒரு வழக்கு. அதிலும் கொலைவழக்கு. அதில் ஆங்காங்கே சிரிக்க, புன்னகைக்க வைக்கும்படி நேர்த்தியான எழுத்து நடை. தேவனின் பெரும்பலம் அவருடைய அசாத்தியமான எழுத்துநடைதான் என்பது என் கருத்து. நீண்ட நேரம் படித்தது போலான உணர்வும், அதிக பக்கங்களைப் படித்து முடித்தது போலான உணர்வும் எழும்பும். ஆனால் நேரமோ சிற்சில நிமிடங்களையே கடந்திருக்கும். நேரங்களை மறந்து ரசிக்க வைக்கக்கூடிய ஒப்பற்ற எழுத்து தேவனுடையது.
மிகச்சமீபத்தில் பாலா சார், மற்றும் அண்ணன் ஓஜஸ் மூலமாக சி.ஐ.டி சந்துரு நாவலையும் படித்து முடித்தேன். காட்சியோடு நம்மையும் ஒன்ற வைக்கும் எழுத்து. அதிலும் சந்துருவின் உரையாடல் ஒவ்வொன்றும் அட! அட! அட! படிக்கையில் தோன்றும் உணர்ச்சிகள் தனி. பளீரென உடைத்துப் பேசும் வேகம் நச்! ஆனால் என்ன? #MMKR படம் பார்த்தாற்போல ஆளாளுக்கு தலையில் தாக்கிக்கொண்டு மயக்கமுறுகிறார்கள்.
இது தேவனின் கடைசி நாவலாம்! இப்போதைக்கு நான் படித்த அவரின் கடைசி நாவலும் இதுதான்.
ஒரே ஒரு வருத்தம் மிஞ்சுகிறது. அவர் எழுதிய இன்னொரு சிறப்பான நாவலான லஷ்மி கடாட்சம் புத்தகத்தின் தோற்றத்தைப் பார்த்து மலைத்துப் போய் படிக்காமல் தவறவிட்டுவிட்டேன். இன்னும் சிறப்பான நூல்களை நான் பார்த்தது கூட கிடையாது. அதையெல்லாம் படிக்க எனக்கு இனியொரு தருணம் அமையும்… காத்திருக்கிறேன்.
Be the first to rate this book.