இந்திய மொழிகளிலேயே மொழிபெயர்ப்பு முயற்சிகளில் மிக நீண்ட பரம்பரியம் மிக்கதாக இருப்பது தமிழ்தான். மொழிபெயர்ப்புக்கான இலக்கணம் தொல்காப்பியத்திலேயே நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால் தற்காலத்தில் மொழிபெயர்ப்பு குறித்த உரையாடல்களே காணக்கிடைப்பதில்லை. மொழிபெயர்ப்புகளின் பொற்காலமாக அறியப்பட்ட ஐம்பதுகளிலும், அசல் படைப்புகளைவிட மொழிபெயர்ப்புகளே அதிகமாக வெளிவரும் இக்காலத்திலும், மொழிபெயர்ப்புகளை எப்படி அணுகுவது, எது சரியான மொழிபெயர்ப்பு என்பதைப் பற்றி தெளிவின்மை நிலவி வருகிறது. மொழிபெயர்ப்பு நுட்பங்களைப் பற்றி சற்று அதிகமாகவே கவலைப்படுபவன் என்பதால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மொழியாக்கம் பற்றிய எனது நம்பிக்கைகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். கடந்த இருபது வருடங்களில் மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்குகளில் ‘வாசித்த’ கட்டுரைகள், இதழ்களில் எழுதிய கட்டுரைகள், அளித்த நேர்காணல்கள் இங்கே நூல் வடிவம் பெறுகின்றன. மொழிபெயர்ப்பியல் பற்றியும், அதன் தொழில்நுட்பங்கள் பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறையவே பேசியிருப்பதை ஒருசேரப் பார்க்கும்போது சற்று வியப்பாகவே இருக்கிறது. ஆனாலும் சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது எனும்படியாகத்தான் பரந்து விரிந்திருக்கிறது இந்த மொழிபெயர்ப்பு எனும் இயல்.
Be the first to rate this book.