அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம்.
இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.
Be the first to rate this book.