இஸ்லாத்தின் இறைத்தூதரது வாழ்க்கை வரலாற்று நூலான இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சீறா ஆக்கங்களிலேயே மிகச்சிறந்த ஒன்று என்பதோடு, பிற மொழிகளில் எழுதப்பட்டவை மத்தியிலும் சிறந்த ஆக்கங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நூலை வாசிப்பவரை அது இறைத்தூதர் வாழ்ந்த காலத்தினூடாக ஒரு ஆன்மிகச் சுற்றுலா சென்றுவரச் செய்கிறது. லிங்ஸ் தனது ஏக்கமிகு ஆவியின் முழுமையுடன் மக்கா-மதீனாவில் வாழ்ந்தது போலவும்; நம்மைப் போன்றவர்கள் இறைத்தூதரை நேரில் காண்பதன் பொருட்டு தம் வாழ்வை நிலைமாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காக, லிங்ஸ் திரும்பி வந்து அந்த வாழ்க்கையை மீட்டி எடுத்துரைப்பது போலவும் இந்நூல் அமைந்திருக்கிறது. அதன் துல்லியம், நேரடித்தன்மை, செதுக்கி வடிக்கப்பட்ட உரைநடை, பேசுபொருளுடனான அன்னியோன்யம், ஆழிய எளிமை என அனைத்திலும் சீறா இலக்கியத்தில் இதற்கு இணையேதும் இல்லை எனலாம்.
ஒரு உயிர்த்துடிப்பான வருணனை மூலம் வாசகரை இறைத்தூதரின் காலத்தினுள் அமிழ்ந்துபோகச் செய்வதற்கு லிங்ஸால் முடிந்திருப்பதே இந்நூலின் தலையாய சிறப்பு. இதனை வாசிக்கும் எவரும் அச்சுஅசலாக ஏழாம் நூற்றாண்டு மக்கா-மதீனாவின் காற்றையே சுவாசிக்கத் துவங்கிவிடுகிறார். நன்கு ஆய்வுசெய்யப்பட்ட ஆதாரக் குறிப்புகள் மாத்திரம் இதனைத் தனிச்சிறப்பான நூலாக்கி விடவில்லை. இறைத்தூதரின் வாழ்வுடன் ஒருவரின் உணர்வுபூர்வமான ஈடுபாடு மற்றும் நினைவு கூரலுக்கான ஓர் உயிர்த்துடிப்பான சாட்சியமாக விளங்கத்தக்க வகையில், ஒரு தொடரான நிகழ்வுகள் பற்றிய அன்னியோன்யமான வருணனையைக் கொண்டு வாசகரின் ஆன்மாவை வென்று கைப்பற்றுகிற அதன் திறனே அதனை அவ்வாறு ஆக்குகிறது.
Be the first to rate this book.