குறும்பட, திரைப்பட இயக்குநர் எனும் அடையாளங்களோடு இயங்கிவரும் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. 18 ஆண்டுகளுக்கு முன் சிறு கதைகள் எழுதத் தொடங்கியவரின் 11 சிறு கதைகள் இந்நூலில் உள்ளன. திரைத் துறைக்கு வருவதற்கு முன்னால், லாரிகளில் கிளீனராகவும் ஓட்டுநராகவும் பணியாற்றிய எழுத்தாளரின் அனுபவங்கள், கதைகளுக்கான பின்புலமாக அமைந்திருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றதோடு, பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் உற்றுநோக்கியுள்ளார் என்பதைக் கதைகளை வாசிக்கையில் கண்டுணர முடிகிறது.
‘பிசகு’ கதையில் வரும் முத்தண்ணாவும், ‘மோகினியின் உருவங்கள்’ கதையில் வரும் ராமசாமி யும் கதையை வாசித்து முடித்த பிறகும், நம் நினைவில் நிற்கும் உயிர்ப்பான மனிதர்களாக இருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் நள்ளிரவு நேரங்களிலும் தடதடத்தபடி ஓடிக்கொண்டே யிருக்கும் லாரிகளின் சக்கரங்களுக்கிடையில் உழைக்கும் மக்களின் இதயத் துடிப்பையும் சேர்த்தே ஒலிக்கச் செய்திருக்கும் கதைகள் என்கிற வகையில் கவனிக்கத்தக்கத் தொகுப்பு.
- மு. முருகேஷ்
Be the first to rate this book.