முஹம்மது பேரன்பும் பெருங்கோபமும் " என்னும் இந்நூலை தினகரன் நாளிதழின் நிருபர் , இதழியலாளர் , எழுத்தாளர் பைம்பொழில் மீரான் அவர்கள் ஆற்றொழுக்கான நடையில் எம்மதத்தவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் மதரீதியான மற்றும் சமூக ரீதியான சொல்வழக்குகளைத் தவிர்த்து திறம்பட எழுதியுள்ளார் . பைம்பொழில் மீரான் அவர்கள் அண்ணலாரின் அழகிய வரலாற்றை ஆறே தலைப்புகளில் வனப்பு மிக்க சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் . அண்ணல் நபி அவர்களைப் பிற மதத்தினர் சரிவரப் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் உத்தம வரலாறு தமிழ் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்படவில்லை என்கிற ஆதங்கம் தமக்கு உண்டு என்றும் அதன் விளைவாகவே , உலகை உய்விக்க வந்த அந்த உன்னத ஆளுமையை , அவர்களின் புனித வாழ்வை எளிமையாக அனைத்து சமுதாய மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் ஒரு ஜனரஞ்சகமான நூலை எழுதவேண்டும் என்னும் வேட்கை தமக்குப் பிறந்ததாகவும் நூலாசிரியர் தமது முன்னுரையில் கூறியுள்ளார் . எனக்கும் நீண்ட நாட்களாகவே இந்த ஆதங்கம் இருந்து வந்தது . இந்த நூல் அந்தப் பெருங்குறையைப் பெருமளவில் நிவர்த்தி செய்துள்ளதாகவே நான் உணர்கிறேன் . அண்ணலாரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களுக்கு நேரிட்ட சோதனைகளையும் அவற்றை முறியடித்து அவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும் இந்நூல் சுவைபட எடுத்துரைக்கின்றது . இந்நூலின் எடுப்பான அம்சங்களாக நான் கருதுவது அண்ணலாரின் மனித நேயப் பண்பு , சமூக நல்லிணக்கம் காத்த அவர்களின் செயல்பாடுகள் குறித்த பதிவுகளைத்தான் . அவற்றின் மூலம் அண்ணலார் அனைத்து மக்களுக்கும் ஓர் அருட்கொடையாக விளங்குவது எதனால் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் . நூலின் இறுதியில் . அண்ணலாரின் மிக முக்கியமான பொன்மொழிகளைத் தொகுத்து வழங்கியிருப்பது நூலின் பெறுமதியைப் பன்மடங்கு உயர்த்தி விடுகின்றது . அண்ணலாரின் திருப்பெயரான " முஹம்மது " வைக் குறிப்பிடும் போதெல்லாம் அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள்
" ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் " என்று அவர்களுக்காகப் பிரார்த்திப்பது மரபு . மரபு மட்டுமல்ல . அது அவர்களுக்குக் கட்டாயக் கடமையும் கூட . ஆனால் , இந்த நூலில் அந்த மரபைக் குறிக்கும் வகையில் " ( ஸல் ) " என்று அடைப்புக் குறிக்குள் குறிப்பிடும் வழக்கத்திலிருந்து விலகி அது இல்லாமல் வெறுமனே " முஹம்மது " என்றே நூலாசிரியர் பதிவு செய்துள்ளார் . அவ்வாறு " ஸல் " என்று இடையிடையே குறிப்பிடும் பட்சத்தில் அது முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு நெருடலாகவும் பொருளும் மரபும் அறியாததால் சற்று குழப்பமளிப்பதாகவும் கவனம் சிதறாமல் நூலைப் படிக்க சிரமமாகவும் இருக்கும் என்பதே அதைத் தவிர்த்ததற்குக் காரணம் என்று நூலாசிரியர் என்னிடம் சொன்ன பொழுது நானும் அண்ணலாரின் திருவாழ்வு தரும் செய்தியை வாசகர்கள் உள்ளத்தில் பதியச்செய்வது தான் முக்கியம் என்று அதனை ஏற்றுக்கொண்டேன் . ஏனெனில் , முஸ்லிமல்லாத அன்பர்களுக்கு அப்படிப் பிரார்த்திப்பது கடமையல்ல . அதே நேரத்தில் முஸ்லிம்கள் அண்ணலாரின் பெயரைக் கேட்டவுடன் தாமாகவே அந்தப் பிரார்த்தனையை மனதிற்குள் செய்து கொள்வார்கள் என்பது என் தாழ்மையான கருத்து . ஆக , தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்லிணக்க நாயகர் , மனித நேயம் கற்பித்த மாண்பாளர் அண்ணல் நபியவர்களின் வரலாற்றை மிக எளிமையாகவும் மனதில் ஆழமாகப் பதியும் வகையிலும் ஈர்ப்பு மிக்க நடையில் பெருமுயற்சி எடுத்து எழுதி வழங்கியிருக்கும் இதழாளர் பைம்பொழில் மீரான் அவர்களை நான் மனமாரப் பாராட்டுவதோடு இந்த அரிய முயற்சியை நன்றியுடன் வரவேற்பது தமிழ் மக்களின் தலையாய கடமை என்று கருதுகிறேன் . தரணி எங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் சாதி மத பேதமின்றி இந்நூலை வாசித்துப் பயன் பெற வேண்டுகிறேன் .
உஸ்தாத் காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி ஸாஹெப்
மேல் விஷாரம்
10/05/2022
Be the first to rate this book.