கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு வரலாற்றைத்தான் ஒவ்வொருவரிடமும் பதித்துவிட்டுச் செல்கிறது. அதை வாசிக்கவும் உள்வாங்கவும்தான் நாம் மறுக்கிறோம். நல்லவேளையாக ப்ரியா தம்பி அந்தத் தவறை செய்யவில்லை. பதிலாக பிறந்தது முதல் ஒவ்வொரு நொடியும் தன் மகள் மின்னு தன்னிடமும், பிறரிடமும் எழுதிச் சென்ற சரித்திரத்தை அப்படியே அள்ளி ஆவணமாக்கியிருக்கிறார். தன் மகளை சிநேகிதியாக அவர் பார்த்திருப்பதும் பாவித்திருப்பதும்தான் இந்த நூலின் சிறப்பம்சம். எங்குமே தன்னை ஒரு படி உயர்த்திக்கொள்ளவும் இல்லை; ‘அம்மா’ என்னும் மிதப்பில் அதிகாரம் செய்யவுமில்லை. சுவாசம் போல் அநிச்சையாக மின்னுவின் ஒவ்வொரு அசைவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். தன் சுக, துக்கங்களை பகிர்ந்துகொண்டு தன் உலகில் மின்னு மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொடுத்திருக்கிறார். இது ‘குழந்தை வளர்ப்பு’க்கான நூல் அல்ல. மகளை காதலியாக, தோழியாக, வழிகாட்டியாக, தாயாக, ஆசானாக ஒரு தாய் பார்க்க ஆரம்பித்தால் எப்படிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை நடைமுறை ரீதியாக விளக்கும் சூத்திரம். சுருக்கமாக சொல்வதெனில், தன் புதையலை, தான் கண்டடைந்த விதம் குறித்து இந்நூலில் ப்ரியா தம்பி விளக்கியிருக்கிறார். அதன்மூலம் நம் பொக்கிஷத்தை நாமும் அடைவதற்கான பாதையை காட்டியிருக்கிறார். பயணப்படுவது அவரவர் பொறுப்பு. ஏனெனில் நிலவறையின் சாவி எந்த மந்திரவாதியிடமும் இல்லை.
- கே.என். சிவராமன்
Be the first to rate this book.