ஆஹா சாஹித் அலி, 1949-ல் டெல்லியில் பிறந்தார். காஷ்மீரில் பெற்றோருடன் இளமைப் பருவத்தைக் கழித்தார். 1976-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறி இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தோ – அமெரிக்க கவிஞராக புகழ்பெற்ற அவரது ஆதர்சக் கவிஞர் எமிலி டிக்கன்ஸன். எமிலி வாழ்ந்த ஆம்ஹெர்ஸ்ட் நகரத்துக்குப் பக்கத்திலேயே 2001-ம் ஆண்டு மரணத்தைத் தழுவினார். ஜம்மு – காஷ்மீரில் வலுப்பெற்ற வன்முறையும் அதை அடக்குகிறேன் என்ற பேரில் தொடங்கிய அரச வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களும் அவரது பிற்காலக் கவிதைகளில் தாக்கம் செலுத்தின.
அவரது புகழ்பெற்ற கவிதைத் தொடரான, ‘The Country Without a Post Office’ அவருக்கு சர்வதேச கவனத்தை அளித்தது. அந்தக் கவிதைகளும் இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் கூடுதலான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ஆஹா சாஹித் அலியின் கவிதைகள் தமிழில் வருவது ஒரு அவசரமான நினைவூட்டல். இந்தியா, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் பிடிக்கு ஆட்பட்டு, ஒரு மதவாத சமூகமாக, துயரகரமான பண்பு மாற்றத்தைச் சந்தித்து வரும் வேளையில் ஆஹா சாஹித்தின், ‘மினாரெட் புதைக்கப்பட்ட நாடு’ கவிதைகள் ஒரு அத்தியாவசியமான இடையீடு.
Be the first to rate this book.