இந்தப் புத்தகம் ஐந்து வருட எழுத்துக்களின் சேமிப்பு.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கீச்சுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. மின்னல் போல் வெட்டும் சிந்தனை எழுத்தில் பாய்ச்சும் சிறு வெளிச்சமே இது.வேறுவேறு தருணங்கள்.வேறுவேறு நிகழ்வுகள்.எல்லாம் ஒளிரும் வெளிப்பாடுகள்.
எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் காலம் இது. நெடிய வரலாற்றையும் நீட்டி முழக்க இங்கே நேரமில்லை என்பதைவிட, அதை விரும்புபவர்களைத் தேடவேண்டியிருக்கிறது. இப்படியான காலச்சூழலில் ட்விட்டர் எழுத்து (கீச்சு) பெருவெற்றியடைந்துவரும் வேளையில், அதை ராஜா சந்திரசேகர் தனக்கான கவித்துவ மேடையாக்கியிருக்கிறார். அவ்வை மற்றும் பாரதியின் ஆத்திசூடிகள் மாபெரும் வெற்றியை அணிய அதன் எளிமையான, ‘சுருக்’ வடிவமும் ஒரு காரணமென்றால், இன்றைய சில ட்விட்டர் பதிவுகளை ‘இந்தக் கால ஆத்திசூடி‘ என்று சொல்வது மிகையாகத் தெரிந்தாலும்.. சொல்லிக்கொள்ளலாம்தானே. தொடர்ந்து ட்விட்டரின் பதிவாக பெரும் கவனிப்பை ஈர்த்த வரிகளை எல்லாம் தொகுப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர். சட்டென்று ஒரே வாசிப்பில் படித்துவிடுவது மாதிரியான தோற்றத்தை இத் தொகுப்பு தந்தாலும், அப்படி ஒரே மூச்சில் படித்துவிட்டு ஆசுவாசம் கொள்ள முடியவில்லை. சில வரிகள் பூவிதழ்களாக விரிகின்றன. சில, கிடாரின் ஒற்றைக் கம்பியின் அதிர்வாக இருக்கிறது. சில உள்ளுக்குள் திருவிழா காண அழைக்கின்றன. உதாரணத்துக்குச் சில கீச்சுகள்:
1. உங்கள் மீதே மோதிக்கொள்வதுதான் மோசமான விபத்து.
2. மின்னல் கிழிக்க மழை தைக்கிறது
3. எல்லோருக்கும் நடிக்கத் தெரிந்திருக்கிறது/யாருக்கும் கலைக்கத் தெரியவில்லை
4. புன்னகை - உலகின் முதல் குறுஞ்செய்தி 5. மருந்துகளால் ஆனது என் உடல்/ நம்பிக்கைகளால் ஆனது என் நலம்.
Be the first to rate this book.