தமிழக அரசியல் வரலாறும் தமிழகத் திரைப்பட வரலாறும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைய ரஜினி, கமல், சீமான் வரை நீள்கிறது இந்த அசாதாரணமான பிணைப்பு. இந்த இரு துறைகளும் சந்தித்துக்கொண்ட புள்ளி எது? இரண்டும் உரையாடத் தொடங்கியது எப்போது? கொண்டும் கொடுத்தும் செழிக்கும் அளவுக்கு இந்த உறவு எவ்வாறு வளர்ந்தது? சினிமா உலகில் அரசியலும் அரசியல் களத்தில் சினிமாவும் இன்று வகிக்கும் இடம் என்ன?
பிரபல ஊடகவியலாளரான ஜீவசகாப்தனின் இந்நூல் சினிமாவையும் அரசியலையும் கோட்பாட்டின் அடிப்படையில் ஆழமாக அணுகி ஆராய்கிறது. ஒரு பக்கம் அண்ணா முதல் ரஜினி வரையிலான சுவையான ஒரு கதை விரிகிறது என்றால் அண்ணாயிசம் முதல் ஆன்மிக அரசியல் வரையிலான கோட்பாட்டுகளின் கதை அடியாழத்தில் அற்புதமாக படர்கிறது.
பெரியார் முதல் இந்துத்துவம் வரை; பாப்புலிசம் முதல் சாதி அரசியல் வரை; மார்க்சியம் முதல் மய்யம் வரை. முந்தைய வரலாற்றையும் இன்றைய அரசியலையும் சுவாரஸ்யமாக இணைக்கும் இந்நூல், ஆழமான விவாதங்களை அழகிய நடையில் முன்வைக்கிறது.
ஜீவசகாப்தன் தமிழின் சமகால ஊடகவியலாளர்களுள் முக்கியமானவர். தமிழ்மண்ணோடு தொடர்புடைய சமூக, அரசியல் விஷயங்கள் குறித்த ஆழமான புரிதல் கொண்டவர். தமிழ்த்தேசியம், திராவிடத் தேசியம், இந்திய தேசியம் என்று தமிழக, இந்திய அரசியலோடு தொடர்புடைய அனைத்தைக் குறித்தும் தெளிவான பார்வை கொண்டவர். தமிழ் ஊடக உலகில் உருவெடுத்த குறிப்பிடத்தக்க நெறியாளரான இவர், நியூஸ் 18 தமிழ்நாடு உள்ளிட்ட தமிழின் முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர்.
Be the first to rate this book.