அதீதனின் இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒரு வகையில், சாய்மானச் சுகமற்ற, ஊன்றிக்கொள்ளக் கைகள் அற்ற அந்த மூன்றுகால்கள் உடைய, ‘புட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் நாற்காலி’யைப் பற்றியது. இன்னொரு வகையில் நான்காம் காலாகத் தாங்கிப் பிடிக்கும் அந்த வளை தடியைப் பற்றியது. பொதுவாகவே எந்தத் தயக்கமும் இன்றி நீள் கவிதைகளை எழுதும் அதீதன் சுரேனின் ‘ பூச்சியைக் கொன்ற பூச்சி’, ’உயிர்ப்புற்ற காலணி’ கவிதைகள் இரண்டும் நீண்ட, கவனமான வாசிப்பைக் கோருபவை.
யாருமற்றுப் போன ஊரில் அலைகிறவனை,,வெற்றுத் தண்டவாளத்தில் மோப்பம் பிடித்தபடியே சுற்றிக்கொண்டிருக்கும் நாயை, முதல் கப்பலில் அப்பாவும், அடுத்த கப்பலில் அம்மாவும், மற்றுமொரு கப்பலில் மூன்றாவது கப்பலும் வரும் கனவை, ஓடும் ரயிலில் ஒளிந்திருக்கும் பூனையை, புழுக்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருப்பவனை எல்லாம் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். தினம் தோறும் வீட்டு வாசலில் மலர்களை வைத்துவிட்டுப் போகும் மாயாவி, அதீதன். அதைக் கண்டறிய இயலாவிடில், திணறித் திணறி நாமே பூவாக மாறிவிடும் வித்தையைத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
- கல்யாண்ஜி
Be the first to rate this book.