திராவிட இயக்கம் பெரியார் - அண்ணா வகுத்துக்கொடுத்த அரசியல் பாதையில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் சிங்காரவேலர் - பெரியார்-ஜீவானந்தம் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கத்தின் சித்தாந்தப் போராட்டத்தில் பின்தங்கிப்போய்விட்டது. அதற்கான காரணங்களை மார்க்ஸிய கண்ணோட்டத்திலிருந்தும் இந்திய, உலக வரலாற்றின் துணைகொண்டும் விரிவா கப் பேசுகிறது ‘மார்க்சிஸ்ட்’ தமிழ் மாத இதழின் ஆசிரியரான வே.மீனாட்சி சுந்தரத்தின் சமீபத்திய புத்தகம்.
அரசியல் பகுப்பாய்வு என்றாலும் அதை மிகவும் எளிய நடையில் சொல்லியிருப்பது அவரது சிறப்பம்சம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடிய இளைஞர்களின் எழுச்சிக்குக் காரணம், தமிழ்நிலம் சார்ந்த அடையாளம் மட்டுமே இல்லை; அரசின் தவறான நடவடிக்கைகளும் அரசியல்வாதிகளின் பொறுப்பின்மையும் அந்த எழுச்சிக்குப் பின்னாலிருந்த சொல்லப்படாத காரணங்கள். புற்றீசல் போல புறப்பட்டுவரும் கட்சிகள், ஜனநாயகத்தின் சாதனை அல்ல, கட்சிகளின் தலைவர் கள் தங்களைத் தவிர யாரையும் ஏற்றுக்கொள்ளாதன் விளைவு.
சமூகப் பாகுபாடுகள் தவிர்க்க முடியாதவை என்பதான கருத்துகள் இந்திய ஜனநாயகத்துக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன. சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் முழு வெற்றி யைப் பெற முடியவில்லை; உடலுழைப்பும் அறிவுசார்ந்த உழைப்பும் சமமான நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை, இரண்டும் வேறுவேறாகக் கணக்கில் கொள்ளப்படும்வரை, சாதியை ஒழிக்க முடியாது. இப்படிப்பட்ட கூர்மையான அரசியல் அவதானிப்புகளை மீனாட்சிசுந்தரத்தின் இந்நூல் நெடுகிலும் காண முடிகிறது.
Be the first to rate this book.