தத்துவம் என்று அழைக்கப்படும் மெய்யியல் என்பது அறிவின் மீதான காதல். அது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் கொண்டிருக்கிறது. அறிவு, விழுமியம், மனம், மொழி, அரசு போன்றவை அதன் உள்பொருள்களாக இருக்கின்றன. தத்துவ அறிவு தனிமனிதரின் சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது; கருத்தாடல், நடைமுறை போன்றவற்றைப் பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது.
இந்த நூலில் எம். எஸ். எம். அனஸ், சோக்ரடீசை முன்வைத்து மெய்யியல் என்னும் பெருங்கனவை நம்மிடம் காட்சிப்படுத்துகிறார். இதை மெய்யியலின் கருவூலமான கிரேக்கத்தின் அறிவுப் பின்னணியிலிருந்து தொடங்குகிறார். வாதக்கலையின் ஆசான்களான சோபிஸ்டுகளின் விவாத முறையையும் அதன் தாக்கத்தையும் மற்றொரு இயலில் விளக்குகிறார்.
சமய, அரசியல் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் இந்த நூலிலுள்ள பிற இயல்கள் பேசுகின்றன. அவற்றில் பகுத்தறிவுவாதம், ஒழுக்கவியல், விமர்சனம் போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன. அவை அன்றாட வாழ்வில் தத்துவம் பேசும் நாகரிகம், ஆன்மாவின் இரகசியம், வாழ்க்கையின் அர்த்தம் போன்றவற்றை நாம் கற்றுக்கொள்ளத் தூண்டுகின்றன.
மக்களாட்சி என்னும் செல்வந்தராட்சிக்கு எதிரான சோக்ரடீசின் விமர்சனங்கள் இன்றைய அரசியலுக்கும் பொருத்தமானவை. அன்றிருந்த அரசியல் முறைமையையும் அதிகார அரசியலையும் முன்வைப்பதன் மூலம், நூலாசிரியர் கிளர்ச்சி மெய்யியல் சமூகத்தில் எந்தவிதமான தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறார்.
பகுத்தறிவுக் காலத் தமிழ்நாட்டில் பெரியார் முதல் கருணாநிதி வரை சோக்ரடீசின் சிந்தனைகளுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை இறுதிப் பகுதி விவரிக்கிறது.
தங்களுடைய அன்றாட வாழ்வில் மெய்யியல் திறனை வளர்த்துக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.