அறிவியல் உலகில் பார்ப்பனரல்லாத, ஓடுக்கப்பட்ட அல்லது தாழ்நிலைச் சாதியில் ஓருவன் பிறந்து தன் முயற்சியினால் போராடி, அறிவியலறிஞனாக முயன்றால், அவனைச் சகிக்காமல், மேல்சாதி ஆதிக்கவாதிகள் எப்படியெல்லாம் ஓடுக்க முடியுமோ, அழிக்க முடியுமோ ஊடகத் தளங்களிலிருந்து அவனை அப்புறப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்தே தீரும் என்று எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது தேவிகாபுரம் சிவா எழுதியுள்ள இந்நூல்.
‘மேக்நாட் சாகா’ என்ற இந்த புத்தகம், இந்தியாவின் அறியப்படாத ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை எல்லாரும் அறிந்துகொள்ளும் வண்ணம் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறது. பல்வேறு தரவுகளைச் சேகரித்து, வாழ்க்கை வரலாற்று நூலுக்கே உரிய சிரத்தையுடன் சிறப்பான முறையில் செய்திருக்கிறார் நூலாசிரியர். அவரது கடும் உழைப்பையும், கவனத்தையும் கோரியிருக்கும் இந்தப் பணி முக்கியமானது. மேக்நாட்டின் முக்கிய படங்களும் இந்தப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேக்நாட்டின் வாழ்க்கை வரலாறு, தமிழில் வருவது இதுவே முதல்முறை. ஆற்றல் மறைக்கப்பட்ட இதுபோன்ற ஆளுமைகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் பணி மிகவும் முக்கியமானது. இந்நூலை வாசிப்பதும் பிறருக்கு அறிமுகப்படுத்துவதும் ஆதிக்க கருத்தியலுக்கு எதிரான செயல்பாடாக அமையும்.
இந்நூலாசிரியர் தேவிகாபுரம்சிவா அவர்கள், சட்டத்துறை அறிஞரென்பதைவிட, இயற்பியல் இளங்கலையில் தேர்ச்சிபெற்றவரென்பதால், இந்நூலில் வேதியியல், இயற்பியல் சார்ந்த ஆய்வுகளை / கோட்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அந்தந்த ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ப, நல்ல தமிழ்க் கலைச்சொற்களைத் தேர்வு செய்து கையாண்டிருப்பது ஏற்புடையதாயிருக்கிறது என்பதுடன். அவரின் அறிவியலார்வமும் விளங்குகின்றது.
Be the first to rate this book.