இன்றைய உலகின் மிக முக்கியமான அறிவியல் துறை சார்ந்த தத்துவவியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் நிக் பாஸ்ட்ரம் Nick Bostrom எழுதிய, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பக வெளியீடாக வந்த, Superintelligence: Paths, Dangers, Strategies என்கிற நூலின் தமிழாக்கம்.
செயற்கை நுண்ணறிவு என்கிற புதிய சவாலை மனிதர்கள் எதிர்கொள்ளும்போது என்னவெல்லாம் நடக்கும்? உண்மையில் யாருக்கும் தெரியாது. ஒரு பக்கம் அதன் விளைவுகள் பற்றி கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையும் இருக்கிறது. இன்னொரு பக்கம் அதை முற்றிலும் அபாயகரமான ஒன்றாக நினைத்து அச்சப்படும் நிலையும் இருக்கிறது.
இப்போதுள்ள செயற்கை நுண்ணறிவைக் காட்டிலும் அடுத்த நிலையில் வரவாய்ப்புள்ள அதீத நுண்ணறிவைப் பற்றிய எச்சரிக்கை நூல்தான் Superintelligence.
அறிவியல், தத்துவம், எதிர்காலவியல் போன்றவை குறித்து அனுபவம் உள்ளவர்களால்கூட அவ்வளவு சுலபமாக கிரகித்துக்கொள்ளமுடியாத சிந்தனைகளைத்தான் நிக் பாஸ்ட்ரம் வெளியிட்டிருக்கிறார். அதை அப்படியே தமிழுக்குக் கொண்டுவரும்போது. அதிகம் எளிமைப்படுத்திவிடாமல் அதே சமயம் முடிந்தவரை சுலபமாக சொல்லமுயன்றிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் ஜெயச்சந்திரன் மாசிலாமணி.
மனித குலத்துக்கே ஆபத்து என்கிற குரலைத்தான் நிக்கும் வெளிப்படுத்துகிறார். ஆனால் அத்தோடு நிற்காமல் அதை எதிர்கொள்ள நமக்கிருக்கும் வாய்ப்புகளையும் பேசுகிறார்.
காலநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் எப்படி நமக்கு ரொம்ப காலம் அவகாசம் இல்லையோ அதே போலத்தான் செயற்கை நுண்ணறிவு விவகாரத்திலும் நமக்கு காத்திருக்க ரொம்ப காலம் இல்லை. மீயறிவு - மீ நுண்ணறிவு - அதற்கான காலத்தில் நாம் ஏற்கனவே நுழைந்துவிட்டிருக்கிறோம்.
சாட்ஜிபிடி ஏற்படுத்துகிற தாக்கத்தையே புரிந்துகொள்ள தடுமாறுகிறோம். அதைவிட பல மடங்கு தாக்கம் செலுத்தக்கூடிய மீயறிவு என்பதைப் பற்றி நம்மால் யோசிக்கக்கூட முடியவில்லை.
எப்போதும் போல வரமும் சாபமுமாகவ பெருந்தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. ஆனால் முதன் முதலாக மனித இன இருப்புக்கே சவால்விடுகிற தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு இருக்கிறது என்று அந்தத் துறையைச் சார்ந்தவர்களே கவலைப்படுகிறார்கள். எனக்கும் அதே கவலைதான்.
ஐலசா Ailaysa என்கிற செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருப்பவன்தான். எனவே செயற்கை நுண்ணறிவு புகழைப் பாடிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால் இந்த நூல் தமிழில் வெளிவரவேண்டும் என்பதற்காக பெருந்தொகையை முன்பணமாகக் கொடுத்து மொழிபெயர்ப்புரிமையை வாங்கியிருக்கிறோம். பல மாதங்கள் ஜெயச்சந்திரன் இதை மொழிபெயர்க்க செலவிட்டிருக்கிறார். நூலும் சற்று அளவில் பெரியாதுதான்.
மனித குலம் விழித்துக்கொள்ளுமா என்கிற கேள்வி முக்கியம். அதற்கான வழிவகைகளைக் கண்டறிவது அதை விட முக்கியம், மேலோட்டமாக அல்லாமல், ஆழமாக படிக்கவேண்டும், செயற்கை நுண்ணறிவுச் சவாலை புரிந்துகொள்ளவேண்டும் என்றால் - அதற்குத்தான் இந்த நூல்..
Be the first to rate this book.