திரு.ரவிக்குமார் படைத்துள்ள இந்நூல் நந்தனாரின் வரலாற்றில் ஒரு புதிய சிந்தனைத் தடத்தை வளர்க்கிறது. இந்த நூலில் தம்பி ரவிக்குமார் “நந்தன் யார்?” என்ற வினாவுக்கு முழுமையான விடை தேடப் பெருமுயற்சி மேற் கொண்டுள்ளார். சேக்கிழார் தனது திருத்தொண்டர் புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கும் நந்தன், காவரிப்படுகையில் அமைந்திருக்கும் ஆதனூர் என்ற ஊரில் உள்ள சேரியைச் சேர்ந்தவன்; “புண்புலை” என்ற நோயால் தீண்டப்பட்டதால், பிறரால் தீண்டப் படாதவனாக வாழ்ந்தவன். நந்தன் சிதம்பரத்திலிருந்தும் நடராசர் கோவிலுக்குச் சென்று வழிபட விரும்பியதும், அதனால் அவன்பட்ட இன்னல்களும், கடவுள் அவனது கனவில் தோன்றி தீக்குளிக்கச் சொன்னதும், அப்படியே செய்து அவன் நடராசனை அடைந்ததும் சேக்கிழார் சொன்ன கதை. கோபாலகிருஷ்ண பாரதியார் உருவாக்கிய நந்தன் பிராமணர்களால் இன்னல்களுக்கு ஆளாக்கப் பட்டதாகச் சொல்லப் படுபவன். 1910ஆம் ஆண்டில் ‘தமிழன்’ ஏட்டில் ‘இந்திர தேச சரித் திரத்தில்’ தொடராக அயோத்திதாச பண்டிதர் விரிவாக எழுதிய நந்தன், “ஒரு புத்த மன்னன், அவன் கூலி அடிமையல்ல; அவனை ஆதிக்கச் சாதியினர் சூழ்ச்சியால் அழித்தனர்” என்ற மையக் கருத்தினையும் மற்ற விவரங்களையும் அடிப்படையாகக்கொண்டு, ஓர் ஆராய்ச்சியாளர் கோணத்தில் தம்பி ரவிக்குமார், தர்க்கரீதியாக எழுதியுள்ள இந்த நூல், நந்தனைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர் அவசியம் படித்தறிய வேண்டிய நூலாகும்.
‘மீளும் வரலாறு: அறியப்படாத நந்தனின் கதை’ என்ற இந்த நூல் தம்பி ரவிக்குமார் அயராது மேற்கொண்ட அரிய முயற்சியினையும், அவரது ஆய்வுத் திறனையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்துகிறது.
‘முத்தமிழறிஞர்’ கலைஞர்
Be the first to rate this book.