கடலோடு கலந்து கடலாகவே மாறிவிட்ட உப்பைப் போலத்தான் வாழ்வில் துயரமும் அப்பிக் கிடக்கிறது. தொடர்ந்து கண்ணுறும் இத்தகைய துயரங்களினால் ஒரு கட்டத்தில் வனம் தவறிய காட்டு யானையைப் போல் நேர்க்கோட்டு வாழ்விலிருந்து விலகிக் கொள்ள முற்பட்டுக் கூடவே சுயத்திலிருந்து தப்பித்து ஆசுவாசம் தேட முயல்கிறது மனம். அதன் மூலம் அடியாழத்தில் தங்கிக் கிடக்கும் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்கான தேடலையும் துவங்கி வைக்கிறது.
அத்தகைய தேடலில் புதைந்து கிடந்த மனிதர்களின் துயரங்களைக் கதையாக்கிப் பார்க்க முயன்றிருக்கிறேன். அது சரி. துயரத்தை ஏன் கதையாக்க வேண்டும்? சக மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகள் மேற்பூச்சுக்குப் பயன்படுகிறதே தவிர ஆழ்மனதின் அந்தரங்கத்தை அவை ஒருபோதும் நெருங்குவதில்லை. கதைகளோ ஆழ்மனதின் ஸ்திரத்தை அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டவை. துயரத்தின் பற்றுதலில் அடிமையாகிக் கிடப்பவனுக்கு அத்துயரமே அவநம்பிக்கைகளை வேரறுத்து அறத்தையும், வாழ்தலின் மீதான புத்தொளியையும் பாய்ச்சிடும் மாய ஜால வித்தையைத் திறம்படச் செய்து முடிக்கின்றன கதைகள்.
Be the first to rate this book.