காகிதக் கப்பல் ஒன்றைச் செய்த சிறுமி அதைக் காற்றில் மிதக்கச் செய்து, இதுதான் கடல் என் கப்பல் மிதக்குது பார் என பார்ப்பவர்களிடம் சொல்வாள். அங்கு உண்மையாகக் கடலும் கப்பலும் இருப்பதையும், அங்கு எதுவுமே இல்லாது போவதையும் மொழியால் நிகழ்த்திக்காட்ட முடியும். பூவிதழ் உமேஷ் இதை வெகு லாகவமாக கவிதைகளில் செயல்படுத்துகிறார்.
தொடர்ந்து தன் தொகுப்புகளில் வெவ்வேறான மாற்றங்களை, பரிசோதனைகளை நிகழ்த்தி மொழியை அழகு படுத்தும் முயற்சி செய்கிறார்.
குளத்தை மேசையாக்கி கல் பழம் உண்ணச் செய்கிறார். உடல் எங்கும் வாய் முளைக்கச் செய்து எதையும் விளைவிக்கும் நிலமாக்குகிறார். தற்கொலை செய்ய நினைக்கும் யானையை அறிமுகப்படுத்துகிறார். தூங்கும் கல் ஒன்றை நம் கைகளில் தருகிறார். பறவையின் நடனம் போல் பேசுபவனைக் காட்டுகிறார்.
இத்தொகுப்பை வாசிப்போருக்கு அற்புத மலர்கள் சேகரமாகிக்கொண்டே இருக்கும். அந்த மலர்களை ஒரு குளத்தில் விட நட்சத்திரமாகும். கவிதையில் எதுவும் சாத்தியம் என்பதை பூவிதழ் உமேஷின் கவிதைகள் வழக்கம் போல இத்தொகுப்பிலும் நிரூபணம் செய்கின்றன.
- ந. பெரியசாமி
Be the first to rate this book.