அல்தூசருக்குப் பிறகு மார்க்சியம் எப்படி ஆனது? என்று ஒரு கேள்வியைக் கேட்பது சுவையானதாக இருக்கும்.அந்தக் கேள்வியை அல்தூசரின் மாணவர்களிடமே கேட்டுப்பார்க்கலாம்.அத்தகைய ஒரு நோக்கத்துடன் தான் எட்டியேன் பாலிபர் என்ற அல்தூசரின் மாணவர் மார்க்சின் தத்துவம் என்ற இந்நூலை எழுதியிருக்க வேண்டும்.
மார்க்ஸ்,எங்கெல்ஸ் மறைவுக்குப் பின்(1883,1895)இரண்டாம் உலகப்போர் முடிந்த காலம் வரையில் சுமார் 45 ஆண்டுகளில் மார்க்சியம் ஒரு சிரமமான வாழ்க்கையை அனுபவித்தது. தலைவர்களை இழந்தமை ஒரு காரணமாக இருக்கலாம்.இடையில் 1917ல் ரஷ்யப் புரட்சி ஒன்றே ஆறுதலான நிகழ்வாக அமைந்தது.
அக்டோபர் புரட்சிக்குப் பிறகான காலம் சோவியத்துக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தமும் பனிப்போர் காலமும். தத்துவ உலகில் முதலில் பாசிட்டிவியம் எனப்பட்ட நேர்க்காட்சிவாதமும் பின்னர் பிராய்டியம், நிகழ்வியல், இருத்தலியம் போன்றவையும்.லெனினுக்கு பிறகு குறிப்பான தத்துவ சாதனைகள் எதுவும் நிகழவில்லை.
மேலே குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு,வலுவான மார்க்சிய சிந்தனையாளர்களாக லூயி அல்தூசரையும் அந்தோனியா கிரம்ஷியையும் தான் குறிப்பிட வேண்டும்.
மார்க்சியத்திற்கு இழுபறியாக இருந்த இக்காலகட்டத்தைத் தான் அல்தூசர் கைப்பற்றினார். அல்தூசர் மார்க்சியத்தை மரியாதைக்குரியதாக மாற்றினார் என்று எட்டியேன் பாலிபர் எழுதுகிறார். ஒரே நேரத்தில் பழமைவாத மார்க்சியத்திற்கும் மாற்றான மூன்றாவதான சிந்தனையாக அல்தூசரின் அணுகுமுறை அமைந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மார்க்சின் தத்துவத்தை எப்படி கண்டறிவது? அறிகுறிகளின் வழியான வாசிப்பு முறை (Symptomatic Reading) என்ற ஒன்றை அல்தூசர் முன்மொழிகிறார். இது உளப்பகுப்பாய்வு முறைகளில் ஒன்றாக வழக்கிலிருப்பது. ஒரு மன நோயாளியின் செயல்பாடுகளிலும் உரையாடல்களிலும் தென்படும் வித்தியாசமான அறிகுறிகளைக் கொண்டு அவற்றைப் பொருண்மைப் படுத்துவதன் மூலமாக நோயின் பண்புகளை அறிந்து கொள்ளுதலே அம்முறை.
முந்திய தத்துவ அறிஞர்கள் விளக்கம் மட்டுமே வழங்கினார்கள் ஆயின் சமூகத்தை மாற்றுவதே விஷயம் என்று ஃபாயர்பாக் பற்றிய 11 ஆவது கருத்துரையில் குறிப்பிட்டார் அல்லவா,உண்மையில் அத்தோடும் அவர் நிறுத்தவில்லை.உலகை மாற்றுவது என்ற நிலைப்பாட்டிலிருந்து உற்பத்தி என்ற பரப்பை நோக்கி நகருகிறார்.
Be the first to rate this book.