"முதலாளியத்துக்கு மாற்று", "முதலாளிய எதிர்ப்பு" (Alternative to Capitalism,Anti-Capitalism) போன்ற சொற்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில்
பிரபலம் அடைந்தன, பன்முகப் பரப்பினைக் கொண்ட மார்க்சியக் கோட்பாட்டுக் கட்டமைப்பில் முதலாளியம் குறித்த ஆய்வினை முதன்மைப் படுத்தி அதற்கு மாற்றான அரசியலில்,கவனத்தைக் குவிக்க வேண்டும் என்ற உடனடி நடைமுறை சார்ந்த நிலைப்பாட்டை கொண்டவர்கள் மேற்குறித்த சொற்களை முன்னுக்கு கொண்டு வந்தார்கள்.
முதாலாளியத்துக்கு மாற்று எனும் சொற்சேர்க்கை மார்க்சியர், மார்க்சியரல்லாத புரட்சியாளர் என்ற பரந்த அணியினரை இணைக்கும் வாய்ப்பினை வழங்கும் என்ற எதிர்பார்ப்பினைக் கொண்டுள்ளது. முதலாளியம் என்ற சமூக அமைப்பைக் குறிவைத்து ஒரு விமர்சன அரசியலை அது வலியுறுத்துகிறது முதலாளியத்துக்கு மாற்றான சமூக அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற இருக்கமான முன்மாதிரியும் இச்சொற்களில் கிடையாது.
மார்க்ஸ் முதலாளியத்துக்கு மாற்று எனும் இந்நூல் முதலாளியத்துக்கு மாற்றான கோட்பாடுகளை வகுத்தளித்தவர்களில் மார்க்ஸ்சே முதன்மையானவரும் முக்கியமானவரும் ஆவார் என்று சொல்லுகிறது.
நூலின் முதல் இயல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தருகிறது. இரண்டாம் இயல் இருபத்தியோராம் நூற்றாண்டு முதாளியத்தின் மையத்திற்கு ஒரு பயணம் மேற்கொள்ளுவோம் என்ற சொற்களுடன் தொடங்குகிறது. எனவே பிரச்சினை 19 ஆம் நூற்றாண்டின் முதலாளியம் அல்ல; நூல், நேரடியாக இப்போதைய முதலாளியத்தைப் பரிசீலிக்கத் தொடங்குகிறது.
நூலின் முதல் பாதி இன்றைய முதலாளியத்தைப் புரிந்து கொள்வதற்கான பல கருத்தாக்கங்களை எடுத்து பேசுகிறது. அந்நியமாதல்,சமூக வர்க்கங்கள்,
பாலினமும் இனமும்,அரசும் சித்தாந்தமும், என கொத்துக் கொத்தாக கருத்தாக்கங்கள்.அவை மிக எளிய மொழியில் விளக்கப்பட்டுள்ளன. இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் கூட இந்நூலை படித்துப் புரிந்துகொள்வார்கள் என ஒரு நூல் விமர்சகர் கூறுகிறார்.
ஃபாயர்பாக்கிடமிருந்து அந்நியமாதல் துவங்குகிறது.அந்நியமாதலின் பல வகைகளை மார்க்ஸ் விவரிக்குறார். மிக முக்கியமாக , மனிதர்கள் தமது சொந்த உழைப்பிலிருந்து அந்நியமாகின்றனர். தொடர்ந்து உற்பத்திக் கருவிகளிலிருந்து,சமூகத்திலிருந்து,சொந்த பந்தங்களிலிருந்து, உலகிலிருந்து, தமது மானுடப் பண்பிலிருந்தே அந்நியமாகின்றனர்.
செல்வச் செழிப்பில் கொழிக்கும் அமெரிக்காவில் பல லட்சம் இளைஞர்கள் மனநோயகளினால் பாதிக்கப்பட்டு உள்ளதை எடுத்துக் காட்டுகிறார். உழைப்புச் சுரண்டலை அந்நியமாதல் மனித அனுபவம் சார்ந்த மொழியில் விளக்குகிறது. சோசலிசத்தின் பொருளாதாரம் மூன்று முக்கியமான அம்சங்களைக் கொண்டிருக்கும் என இந்நூலாசிரியர் வரையறுக்கிறார் அவை:
1 பொது உரிமையாக்கம்
2 தொழிலாளர் கட்டுப்பாடு
3 சோசலிசத் திட்டமிடல்
பாரீஸ் கம்யூன் காலத்திலிருந்தே சோஷலிச சமுதாயம் எப்படி அமைந்திருக்கும் என்ற கேள்வி பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. பல பரிசோதனை முயற்சிகளும் தேர்வுக்களும்கூட நம்மைக் கடந்து சென்றுள்ளன. இன்றும் அதற்கான தேடுதல்கள் முடிந்து போய் விடவில்லை.
Be the first to rate this book.